சென்னை, டிசம்பர் 28 2024
ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 (Rotary International District 3234) அமைப்பானது, மெட்ராஸ் ரோட்டரி கிளப் (Rotary Club of Madras),மகளிர் அதிகாரமளிப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்வாய்ப்பு சேவைகள் குழு (Women Empowerment, Economic Development, and Vocational Services Team), ஆக்சஸ் ஹெல்த்கேர்(Access Healthcare) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுத் துறை உதவியுடன் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெறவும், சொந்தமாகத் தையல் தொழிலைத் தொடங்கவும், டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரி திறன் மேம்பாட்டு மையத்தைத் (Rotary Skill Development Centre) தொடங்கியது.
இந்தத் திறன் மேம்பாட்டு மையத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. த. வேலு மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 அமைப்பின் மாவட்ட ஆளுநர் திரு. என்.எஸ். சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் திரு. ஏ.கே.எஸ். மஹிந்தர் ஜெயின், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,சேலையூர், செம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் ரோட்டரி திறன் மேம்பாட்டு மையங்களில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 200விலையில்லா மின் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள புதிய மையமானது, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து, அனைத்துப் பின்னணிகளில் இருந்து வரும் பெண்களுக்கும் 3 மாதங்களுக்கு, 120 மணிநேர தையல் பயிற்சிகளை இலவசமாக வழங்கவுள்ளது. பயிற்சி முடித்த பெண்கள் தொழில் தொடங்க விரும்பினால், ரோட்டரி அமைப்பானதுவிலையில்லா மின் தையல் இயந்திரங்களை வழங்கும்.
டாக்டர் எம்.ஜி.ஆர்.- ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரும், டிஸ்ட்ரிக்ட் ரோட்டராக்ட் அமைப்பின் தலைவருமாகிய (District Rotaract Chair) முனைவர் குமார் ராஜேந்திரன், இம்மையத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளார். ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234, அதன் நான்கு திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1500 பெண்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தத் திறன் மேம்பாட்டு மையத்தின் தொடக்க விழா மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் அமைப்பின் தலைவர் திரு. ஜி. செல்லா கிருஷ்ணா, கௌரவ செயலாளர் திரு. ராஜேஷ் மணி, ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 அமைப்பின்கான்ஃபரன்ஸ் மற்றும் சி.எஸ்.ஆர். தலைவர் திரு. எஸ். ரவி, தொழில்வாய்ப்பு சேவைகள் பிரிவின் தலைவர் திருமதி. சுஜாதா பஞ்சு, பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் திருமதி. ரமா கணேஷ், தொழில்வாய்ப்பு சேவைகள் பிரிவின் இயக்குனர் திரு. சஞ்சய் ராவ் சாகந்தி, மகளிர் அதிகாரமளிப்பு பிரிவின் தலைவர் திருமதி. கமலா செல்வம் மற்றும் முனைவர் குமார் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.