சென்னை, செப்.2026 : சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி.) கடந்த 1976-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் 50-வது ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பழைய உடற்கூறியல் துறை கட்டிடத்தில் நேற்று நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மொத்தம் 110 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியை டாக்டர் மகேந்திரன் ஒருங்கிணைத்தார்.
விழாவில் பங்கேற்ற ஆண் டாக்டர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பாரம்பரிய வேட்டியும், பெண் டாக்டர்கள் பட்டுப் புடவையும் அணிந்து வந்து அசத்தினர். அவர்கள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறைக்குச் சென்று, தங்களது கல்லூரி கால பழைய நினைவுகளை நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, வகுப்பறையில் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டினர். பின்னர், ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிவிட்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவருமான டாக்டர் மகேந்திரன் கூறியதாவது:
இந்த சந்திப்பு எங்களை மீண்டும் கல்லூரி காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டது. சில நண்பர்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழாவில் சந்தித்து மகிழ்ந்தோம். சென்னை மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகப் பணியை அரசு விரைந்து முடிக்க வேண்டும். எங்களது பொன்விழாவை முன்னிட்டு, ஆதரவற்ற 5 பெண்களுக்கு வங்கி உதவியுடன் 5 ‘பிங்க் ஆட்டோக்கள்’ வழங்க உள்ளோம்.
அதேபோல், ஒருவருக்கு ஒருவர் இதயத் துடிப்பை ஆய்வு செய்து, தேவைப்படும் நேரத்தில் லேசான மின்சார அதிர்ச்சி கொடுத்து உயிரைக் காக்கும் ஏ.இ.டி. (AED) எந்திரங்கள் 200-ஐ, மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விழா முடிவில், தாங்கள் படித்து வளர்ந்த கல்லூரியை சுற்றிப் பார்த்த முன்னாள் மாணவர்கள், அங்கிருந்து செல்ல மனமில்லாமல் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பிரியாவிடை கொடுத்து சென்றனர்.
