
சென்னை: “மேகேதாட்டு அணை கட்ட விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்ற கர்நாடக முதல்வரின் ஆணவப் பேச்சு, இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது. கர்நாட அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து, 16,745 கோடி ரூபாய் மதிப்பிலான மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கான அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், மத்திய நீர் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, விரைவில் ஒன்றிய அரசு அனுமதியளிக்கும் என்று உறுதிபட பேசி இருப்பது ஆணவத்தின் உச்சம்.
இந்திய கூட்டாட்சிக்கு எதிரான கர்நாடக முதல்வரின் வரம்பு மீறிய பேச்சுக்கு, இந்திய ஒன்றிய அரசு எந்த மறுப்பும் தெரிவிக்காதது தமிழ்நாட்டுக்கு செய்கின்ற பெருந்துரோகம். மேகேதாட்டு திட்டத்தை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு காட்டும் இத்தகைய தொடர் முனைப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன.காவிரி கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமான நதி இல்லை. அது தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த வாழ்வாதார உரிமை. காவிரியின் கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் நீருரிமையையும், லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தையும் புறந்தள்ளிவிட்டு கர்நாடகம் தன்னிச்சையாக புதிய அணையைக் கட்ட முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஏற்கெனவே தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைப் பெறுவதற்கே ஆண்டுதோறும் போராட வேண்டியிருக்கும் நிலையில், மேலும் ஒரு மிகப்பெரிய அணையை காவிரியின் குறுக்கே கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும்.
மேகேதாட்டு அணைக்கு தொழில்நுட்ப அனுமதியோ, சுற்றுச்சூழல் அனுமதியோ உள்ளிட்ட எவ்வித ஒப்புதலையும் இந்திய ஒன்றிய அரசு வழங்கக்கூடாது என்றும், ஒன்றிய நீர் ஆணையம் கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தை தகர்க்கும் வகையில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசு திட்டத்தை முன்னெடுக்க முயலும்போது, தவெக அரசு அடுத்தகட்டமாக எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
கர்நாடக முதல்வர், ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து அனுமதி கோருகிறார்; தமிழ்நாடு முதல்வர் காவிரி உரிமையைக் காக்க ஒன்றிய அரசிடம் என்ன அரசியல் மற்றும் சட்ட அழுத்தத்தை உருவாக்கியுள்ளார்? மேகேதாட்டு திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று ஒன்றிய அரசிடம் வெறும் கோரிக்கை வைத்து வழக்கம்போல் கடிதம் எழுதுவதோடு முதல்வர் விஜய் கடமையை முடித்துக்கொள்வாரா?
கர்நாடக அரசு தனது மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் நலனுக்காக அதே உறுதியையும் வேகத்தையும் தவெக அரசு காட்ட வேண்டாமா?
காவிரி நீர் உரிமையை இழந்த பிறகு போராடி என்ன பயன்? அணைக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்துவதுதானே ஒரு பொறுப்புள்ள தமிழ்நாடு அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்?
மேகேதாட்டு என்பது வெறும் ஓர் அணை சிக்கல் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் நீருரிமை, உணவு உற்பத்தி, டெல்டா உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய மிக முக்கியமான உரிமைப் பிரச்சினையாகும். எக்காரணம் கொண்டும், எத்தகைய அழுத்தம் வந்தாலும், தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கும் மேகேதாட்டு அணையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய ஒன்றிய அரசின் அனுமதியை பெறவும் விடக்கூடாது.
எனவே, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கி, ஒன்றிய அரசு எந்தவிதமான அனுமதியையும் வழங்காமல் தடுப்பதற்குத் தேவையான சட்ட, நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
