
மாஸ்கோ: ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் பிளேக் நோய் தொடர்பான பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு சைபீரியாவில் ஷெலெகாவ் நகரில் இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த டாரியா ஷிபிலோவா (28) என்ற பெண், கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அக்டோபர் 2 அன்று உயிரிழந்தார்.அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் 197 பேரில் 189 பேர் மருத்துவக் கண்காணிப்பிற்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் யாருக்கும் இதுவரை நோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ‘லியூடி பைக்கலா’ என்ற ரஷ்ய ஊடகம் வெளியிட்ட செய்தியில், “உயிரிழந்த ஷிபிலோவா, செப்டம்பர் 25 அன்று பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா அடங்கிய சோதனைக்குழாய் ஒன்றை ஆய்வகத்தில் தவறுதலாக உடைத்துவிட்டதாகவும், அதிலிருந்து அவர் நோய்த்தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால், ஆய்வகத்தில் கிருமிகள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு ரஷ்யாவின் மத்திய சுகாதார முகமையான ‘ரோஸ்போட்ரெப்நாட்சோர்’ மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஷிபிலோவாவின் மரணத்திற்கு காரணம் அறியப்படாத நிமோனியா தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது்.
