சென்னை, நவம்பர் 2026: பல வாரங்களாகத் தொடர்ந்து இருந்தமுதுகு வலி மற்றும் காலில் உணர்வின்றி மரத்துப்போதல் பிரச்சனைகாரணமாக எம்.ஜி.எம் புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்த 55 வயது நபருக்கு, முதுகெலும்பு வரை பரவியிருந்த ரத்த நாளங்கள் நிறைந்த ‘ரெட்ரோஸ்டெர்னல் தைராய்டு’ புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உலகளவில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே இதுபோன்ற தீவிரமான நிலை ஆரம்பத்திலேயே காணப்படுகிறது.
முதுகு வலி மற்றும் கால்களில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நோயாளியைப்பரிசோதித்ததில், மார்பறையின் முதுகெலும்புப் (Thoracic Vertebra) பகுதியில் அதிகப்படியான ரத்த நாளங்களைக் கொண்ட ஒரு கட்டி அவரது தண்டுவடத்தை (Spinal cord) அழுத்துவதும், அதுவே அவரது பாதிப்புகளுக்குக் காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் ஆராய்ந்ததில், தண்டுவடத்தை அழுத்தும் இந்த கட்டியானது,நெஞ்செலும்புக்குக் கீழே தோன்றியிருந்த முதன்மை தைராய்டு புற்றுநோயிலிருந்து பரவிய இரண்டாம் நிலைக் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.
அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எஸ். ஸ்ரீவிஷ்ணு மற்றும் முதுகெலும்பு அறுவைசிகிச்சை மூத்த நிபுணர் டாக்டர் ஜி. விஜயராகவன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த நோயாளிக்கு இரண்டு முக்கிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். முதலாவதாக, முழு தைராய்டு சுரப்பியையும், அத்துடன் சேர்த்து பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிணநீர் முனைகளையும் (Lymph nodes) அகற்றும் ‘டோட்டல் தைராய்டெக்டமி’ சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டாவதாக, D2 முதல் D5 வரையிலான முதுகெலும்புப் பகுதியில் முதுகுத்தண்டின் எலும்பு பட்டையை அகற்றும் சிகிச்சையும், நிலைப்படுத்தல்சிகிச்சையும் செய்யப்பட்டன. இதற்காக 2-வது முதல் 5-வது வரையிலான தொராசிக் முதுகெலும்பின் பின்பகுதி அகற்றப்பட்டு தண்டுவடத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டது. பின்னர் உள்வைப்புகள் மூலம் முதுகெலும்பு பாதுகாப்பாக உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு தண்டுவடத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டதால் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டதோடு, பாதிப்பு அறிகுறிகளிலிருந்து நோயாளிக்கு நிவாரணம் கிடைத்தது.
அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவரும் மூத்த நிபுணருமான டாக்டர் சிவராம் கணேசமணி கூறுகையில், “முதுகெலும்பிற்குப் பரவி நோயாளியின் கால்களைச் செயலிழக்கச் செய்யும் அபாயத்திலிருந்த, ரத்த நாளங்கள் நிறைந்த ரெட்ரோஸ்டெர்னல் தைராய்டு புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க,புற்றுநோயியல் மற்றும் முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இடையிலான துல்லியமான ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. எங்களின் நுட்பமான திட்டமிடலும் சிறப்பான குழுப்பணியுமே இந்த சிகிச்சையின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டதும், உரிய நேரத்திற்குள் தண்டுவடத்தின் அழுத்தத்தைக் குறைத்ததும்,நரம்புகளில் நிரந்தர பாதிப்பு ஏற்படுவதைத் தடுத்து,அறுவைசிகிச்சையின் வெற்றியையும், சிகிச்சை பலன்களையும் பெரிதும் மேம்படுத்தியது. ஆண்களைப் பொறுத்தவரை, தைராய்டு புற்றுநோய் பெரும்பாலும் மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. கழுத்தில் இருந்து மார்புப் பகுதியை நோக்கிக் கீழ்நோக்கி வளரும் இந்தக் கட்டி, கழுத்துப் பகுதியில் எந்தவித வீக்கத்தையோ அறிகுறிகளையோ வெளிப்படுத்துவதில்லை” என்றார்.
டாக்டர் எஸ். ஸ்ரீவிஷ்ணு கூறுகையில், “இந்த அறுவைசிகிச்சையில் மருத்துவ ரீதியில் பல சவால்கள் இருந்தன. புற்றுக்கட்டியில் அதிகளவில் ரத்த நாளங்கள் இருந்ததால் அறுவைசிகிச்சையின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தது. அத்துடன்,தைராய்டு சுரப்பி நெஞ்செலும்பு வரை பரவியிருந்ததால், அதனுள் சென்று கட்டியை அகற்றுவது மேலும் சவாலாக அமைந்தது. இந்தச் சிக்கல்களைச் சமாளித்து நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையை வழங்க, கவனமான திட்டமிடலும், பல்வேறு துறை நிபுணர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையுமே பேருதவியாக இருந்தன” என்று தெரிவித்தார்.
டாக்டர் ஜி. விஜயராகவன் கூறுகையில், “புற்றுநோய் முதுகெலும்பு வரை பரவியிருந்ததால், தண்டுவடம் அதிக ஆபத்துக்கு ஆளாகும் நிலையில் இருந்தது. இதனால் நோயாளிக்கு நிரந்தர பக்கவாதம் ஏற்படுவதுடன் சிறுநீர் கட்டுப்பாட்டை இழக்கும் இடர்வாய்ப்பும்இருந்தது. எனவே, தண்டுவடத்தின் மீதான கட்டியின் அழுத்தத்தைக் குறைத்து, உள்வைப்புகள் மூலம் முதுகெலும்பை உறுதிப்படுத்துவதே இந்த அறுவைசிகிச்சையின் முதன்மை நோக்கமாக இருந்தது. நரம்பு மண்டல செயல்பாட்டைப் பாதுகாக்கவும், நிரந்தர பாதிப்புகள் வராமல்தடுக்கவும், தகுந்த நேரத்தில் இந்த அறுவைசிகிச்சையை செய்வது மிக முக்கியமானதாக அமைந்தது” என்றார்.
8 மணி நேரம் நடந்த இந்த சிக்கலான அறுவைசிகிச்சைகளுக்குப்பிறகு சீரான நிலையில் உள்ள நோயாளியின் உடல்நலம் வேகமாக தேறி வருகிறது. அறுவைசிகிச்சை முடிந்து மூன்றாவது நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தைராய்டு சுரப்பி முழுமையாக அகற்றப்பட்டுள்ளதால், முதுகெலும்பில் எஞ்சியிருக்கும் புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக அவருக்கு அடுத்தபடியாக ‘கதிரியக்க அயோடின் சிகிச்சை’ அளிக்கப்பட உள்ளது.
