திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா மையத்தில் 21 நவம்பர் 2026 அன்று தேசிய மாணவர் படை (என் சி சி – NCC) தின விழா கொண்டாடப்பட்டது.
சி யூ ஆர் ஐ (CURI) மருத்துவமனையின் சி எஸ் ஆர் திட்ட மேலாளர் எஸ் சங்கீதா அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள் 13 (TN) பட்டாலியன் என் சி சி பிரிவில் உள்ளனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய சங்கீதா அவர்கள் “சமூக சேவைக்காக சேவாலயாவில் மூன்று மாதம் தங்கியிருந்து, சமூக சேவை பற்றி நன்கு அறிந்து கொண்டேன். என் சி சி செயல்பாடுகள் ஒழுக்கம், தலைமைத்துவம், தேசபக்தி, சமத்துவம், ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் ஆர்வத்துடன் ஈடுபடுங்கள்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சில வார்த்தை விளையாட்டுக்களை விளையாடினார். விளையாட்டு மற்றும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு சிறு கதையையையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இரண்டு மாணவ மாணவிகள் தங்கள் என் சி சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். என் சி சி கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பு விருந்தினர் மாணவர்களுடன் உரையாடினார். நிகழ்ச்சியின் போது சின்மயா மிஷன் மாநில அளவில் நடத்திய பகவத் கீதை போட்டியில் சேவாலயா மாணவர்கள் பெற்ற பரிசினை சிறப்பு விருந்தினர் மாணவர்களிடம் வழங்கினார்.
முன்னதாக, சேவாலயா ஆசிரியை எஸ் மாரியம்மாள் அவர்கள் அனைவரையும் வரவேற்று, சேவாலயாவின் செயல்பாடுகளை குறித்து விளக்கினார். மாணவ மாணவியர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
சேவாலயாவின் என் சி சி ஒருங்கிணைப்பாளர் சி டி ஓ (CTO) ஸ்ரீ வைஷ்ணவி தேவி கே அவர்கள் நன்றியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சேவாலயா 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 66 மையங்களில் செயல்பட்டு வரும் சேவாலயா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குகிறது. மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்துகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், கோசாலைகள், இயற்கை விவசாய பண்ணைகள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களும் சேவாலயா மூலம் நடத்தப்படுகின்றன. இது தவிர, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சேவாலயாவின் அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 38 ஆண்டுகளில் ஏறத்தாழ 20,00,000 பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் சேவாலயா பங்காற்றியுள்ளது. மேலும் விவரங்களுக்கு / நன்கொடை வழங்க / தன்னார்வத் தொண்டு புரிய sevalaya.org என்ற இணையமுகவரியிலோ அல்லது 9677713448 என்ற எண்ணிலோ / வாட்சப் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
