சென்னை, அக்டோபர் 24 உலகிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் உலகளாவிய சந்தையை உருவாக்கும் நோக்குடன், ‘International Tamilar Business Conclave-2025’ எனும் சர்வதேசத் தமிழர்கள் வர்த்தக மாநாடு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடானது, உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் வர்த்தக வல்லமையைப் பறைசாற்றுவதோடு, தமிழகப் பாரம்பரியத்தின் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக அரங்கில் கொண்டு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது.
2025 டிசம்பர் 22 முதல் 25 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மலேசியாவில் உள்ள ஹோட்டல் விந்தாம் கார்டன் ஐ-சிட்டி & மிட்லேண்ட்ஸ் கண்வென்ஷன் சென்டர் ஷா ஆலம் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இதில் 23 ஆம் தேதி மலேசியாவில் உள்ள தமிழர் வர்த்தக சங்கம் 4வது ஆண்டு விழாவும் நடைபெறுகிறது. விழாவில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மலேசிய வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளார்கள், விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் மதிய உணவாக பரிமாறப்படும்.
இந்த மாநாட்டில் உலகெங்கும் உள்ள தமிழ் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் மலேசியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
இந்த மாபெரும் நிகழ்ச்சியை மலேசிய தமிழர் வர்த்தக சபை, டேன் மில்லட்ஸ், ஆர்.பி.ஜி. குழுமம் கனடா, ஆஸ்திரேலியா ஆசியா இந்தியா வர்த்தக நிறுவனம் ஆஸ்திரேலியா, மேப் டிஜி, பிஸ் நெட் சொல்யூஷன்ஸ், தாய்மடி மரச்செக்கு இயந்திரங்கள் மற்றும் சென்டெக் இன்ஞினியரிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
குறிப்பாக இந்த மாநாட்டில், இலங்கையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகள், இறக்குமதியாளர்கள், தொழில்முனைவோர்கள், இலங்கை அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் உலகெங்கிலிருந்தும் வரும் தமிழ் வர்த்தகர்கள், தொழில் முனைவோரிடம் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக காட்டி வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சுந்தர், நிறுவனர், மில்லட் பவுண்டேஷன் மற்றும் பாலகிருஷ்ணன் பத்துமலை, தலைவர், தமிழர் வர்த்தக சங்கம் மலேசியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு: எஸ். சுந்தர், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர். மொபைல் 93675 50555
