சென்னை, செப்டம்பர் 11, 2026: எம்.ஜி.எம் மருத்துவமனை உலக ரோஜா தினத்தை, புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகக் கொண்டாடியது. ஏப்ரல் 2024 முதல் 100 எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சைகளை முடித்த சாதனை மற்றும் ‘ஸ்வஸ்தி’ அட்டையின் அறிமுகம் என இந்த விழா அமைந்தது. எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்று புற்றுநோயை வென்ற வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்கும் முன்முயற்சியாக ஸ்வஸ்தி அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏப்ரல் 2024 முதல் எம்.ஜி.எம் புற்றுநோய் மருத்துவமனையில் இரத்த அழிவுச்சோகை (தலசீமியா), அரிவாள் அணு இரத்தசோகை, சிவப்பணு வளர்ச்சியற்ற சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் மற்றும் தீவிர இரத்தப் புற்று நோய், மைலோமா போன்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளுக்கு எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளியின் சொந்த உயிரணுக்களைப் பயன்படுத்தும் ஆட்டோலோகஸ் முறை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பெறப்பட்ட உயிரணுக்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகள் முதல், மிகவும் சிக்கலான, பாதி அளவே பொருந்திய மஜ்ஜை மாற்று சிகிச்சைகள் வரை பலவித சிகிச்சை முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.
அனாமயா சில்ட்ரன்ஸ் டிரஸ்ட் நிறுவனத்துடன் எம்.ஜி.எம் புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, ‘ஸ்வஸ்தி’ அட்டை மூலமாக, புற்றுநோயை வென்ற குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மேற்கல்வி பெற நுழையும்போது அவர்களின் கல்விக்காக நிதி உதவியை வழங்கும். இலவச சிகிச்சைத் திட்டங்களின் கீழ் வரும் தகுதியுடையவர்கள் உட்பட பல அளவுகோல்களின் அடிப்படையில் கல்வி நிதியுதவியைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
புற்றுநோயை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக வென்றவர்களைக் கௌரவிப்பதற்காக, இந்த நிகழ்வின் போது அனைவருக்கும் ரோஜாப் பூக்கள் அன்பின் வெளிப்பாடாக விநியோகிக்கப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறார்கள் உட்பட, புற்றுநோயை வென்றவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த மாலைப் பொழுதில், மனதைக் கவரும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாடல் மற்றும் நடனம், புற்றுநோயை வென்ற சாதனையாளர்களின் ஊக்கமளிக்கும் உரைகள், ஒரு மேஜிக் ஷோ, மற்றும் குழந்தைகளுக்கான வேடிக்கையான விளையாட்டுகள் இடம்பெற்றன. சமூக ஒற்றுமையுணர்வை இந்நிகழ்வு வளர்த்ததோடு, நம்பிக்கை, தைரியம், ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவசியமாகத் தேவைப்படும் உணர்வுப்பூர்வமான ஆதரவை அனைவரும் தாராள மனதோடு வழங்குவதன் அவசியத்தை உணர்த்தும் நிகழ்வாக இது அமைந்தது.
திரைப்பட இயக்குநர் திரு. எச். வினோத், பின்னணிப் பாடகி திருமதி விஷ்ணுபிரியா ரவி, ஸ்வர்ண பாரத் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திருமதி தீபா வெங்கட், தியாரா கிட்ஸ் நிர்வாக அறங்காவலர் திருமதி அபர்ணா ஷியாம், மற்றும் டிகேஎம்எஸ் பவுண்டேஷன் இந்தியா டிஆர்எம் தலைவர் டாக்டர் நிதின் அகர்வால் ஆகியோர் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் அவர்களுடன் இணைந்து இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வைப் பற்றி எம்.ஜி.எம் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி திரு. சரவணக்குமார் ராஜன்கூறியதாவது: “புற்றுநோயை வெல்வது பயணத்தின் முடிவல்ல;இது நம்பிக்கையும் புதிய சாத்தியக்கூறுகளும் நிறைந்த ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். புற்றுநோயை வெல்லும் ஒவ்வொரு நோயாளியும் எவ்வித நிதித் தடைகளுமின்றி தங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் தொடரவும், அடையவும் தகுதியானவர்கள். ‘ஸ்வஸ்தி’ அட்டையின் மூலம், எங்கள் ஆதரவை சிகிச்சைக்கு பிறகும் நீட்டித்து, இந்த இளம் போராளிகளின் கல்விப் பயணத்திற்கு எங்களின் அர்த்தமுள்ள பங்களிப்பு இது. இதில் எங்களுடன் கைகோர்த்த கூட்டாளர்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நம்பிக்கையுடன் ஒளிமயமான எதிர்காலத்தை இக்குழந்தைகள் உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் தீனதயாளன்பேசுகையில்: “இந்தியாவில் ஆண்டுதோறும் 75,000குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகமாகத் தோன்றினாலும், நவீன மருத்துவ முன்னேற்றங்கள், நோயை ஆரம்பத்தில் கண்டறியும் முறைகள்,இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை, நோய் எதிர்ப்புச் சிகிச்சை போன்ற மேம்பட்ட விருப்பங்கள் மற்றும் உயிரணு சிகிச்சைத் துறையிலுள்ள புதிய கண்டுபிடிப்புகள் நோயைக் குணப்படுத்தும் விகிதத்தை 90 சதவீதம் வரை மேம்படுத்தியுள்ளன. சரியான மருத்துவ சிகிச்சைப் பராமரிப்புடன், நோயாளிகள் மற்றவர்களைப் போலவே இயல்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும்.” என்றார்.
ரத்தப் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எம். கோபிநாதன்கூறுகையில், “உலக ரோஜா தினம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது என்பது, வெறும் மருத்துவச் சிகிச்சை மட்டுமல்ல என்பதை நினைவூட்டுகிறது. இது நம்பிக்கை, பரிவு, புரிந்துணர்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்ற பண்பியல்புகளைப் பற்றியது. நோயாளிகளுடன் தோழமையையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தவும்,புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் தைரியத்தையும்,விடாமுயற்சியைக் கொண்டாடவும் மற்றும் புற்றுநோயாளிகளைக் கவனித்துக் கொள்பவர்களின் அயராத கடின முயற்சிகளை அங்கீகரித்து, கௌரவிக்கவும் இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பாகும். நோயாளி குணமடைவதில் உணர்வு சார்ந்த ஆதரவும், விழிப்புணர்வும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எந்தவொரு நோயாளியும் தனிமை உணர்வில் தவிக்காமல் இருப்பதை இம்முயற்சிகள் உறுதி செய்கின்றன” என்றார்.
அனைத்து வயது நோயாளிகளுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முறைகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எம்.ஜி.எம் புற்றுநோய் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்,ஆரோக்கிய ஸ்ரீ போன்ற பல்வேறு திட்டங்கள், எளிய பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் இந்த உயிர் காக்கும் சிகிச்சையை எளிதாக அணுகிப் பெற்று குணமடைவதற்குத் தேவையான ஆதரவைப் பெற மிகவும் உதவுகின்றன.
