சென்னை, நவம்பர் , 2026: பாரத் பல்கலைக்கழகம் என்று பரவலாக அறியப்படும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 2025–2026 கல்வியாண்டுக்கான 44-வது பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் மொத்தம் 5,278 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், செவிலியர், பிசியோதெரபி, வேளாண்மை, அறிவியல், தொழில்நுட்பம், சட்டம், மானுடவியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் அடங்குவர். இவர்களில் 148 பேர் முனைவர் (Ph.D.) பட்டமும், 667 பேர் முதுகலை (PG) பட்டமும், 4,463 பேர் இளங்கலை (UG) பட்டமும் பெற்றனர்.
இந்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தலைவர் டாக்டர். அபிஜாத் சந்திரகாந்த் ஷேத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். இந்நிகழ்வில், பல்கலைக்கழக நிறுவனத் தலைவர் டாக்டர். S. ஜெகத்ரட்சகன், வேந்தர் பேராசிரியர் டாக்டர். முகமது ரேலா மற்றும் இணை வேந்தர் டாக்டர். J. ஸ்ரீ நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ பாலாஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. N. இளமாறன், பாரத் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். J. சந்தீப் ஆனந்த் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஸ்வேதா சந்தீப் ஆனந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும், துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர். எம். சுந்தரராஜன், இணை வேந்தர் (ஆராய்ச்சி) டாக்டர். S. சுரேஷ் குமார், பாரத் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி. ஜே.எல். ஸ்ரீ ரக்ஷிகா, ஸ்ரீ பாலாஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி. E. ஸ்ரீ ரித்விகா, இணை துணைவேந்தர்கள் டாக்டர். R. M. சுரேஷ் மற்றும் டாக்டர். ஆர். ஹரிபிரகாஷ், பதிவாளர் டாக்டர். S. பூமிநாதன், டீன் டாக்டர். M. சுந்தர்ராஜ், சென்னை SBMCH டீன் டாக்டர். P. சசிகுமார், புதுச்சேரி SLIMS டீன் டாக்டர். G. ஜெயலட்சுமி மற்றும் சென்னை BMCH டீன் டாக்டர். G. R. ராஜஸ்ரீ ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட BIHER, இன்று பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், நர்சிங், பிசியோதெரபி, வேளாண்மை, அறிவியல், தொழில்நுட்பம், சட்டம், மானுடவியல் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் பல்வேறு உயர்கல்வித் திட்டங்களை வழங்கும் பன்முகக் கல்வி நிறுவனமாகப் பரிணமித்துள்ளது. BMCH, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, SBMCH, ஸ்ரீ பாலாஜி பிசியோதெரபி கல்லூரி மற்றும் புதுச்சேரி SLIMS உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் பரந்த கட்டமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.
விமானப் பொறியியல் பள்ளி, வேளாண்மைப் பள்ளி, உயிரி-பொறியியல் பள்ளி, சட்டப் பள்ளி, மருத்துவப் பள்ளி, மேலாண்மை-வணிகப் பள்ளி போன்ற பல சிறப்புப் பள்ளிகளையும் BIHER தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சாரங்களைக் கொண்ட சிறந்த கற்றல் வாய்ப்புகளை வழங்கி, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10,000 மாணவர்களுக்கு உயர்தரகல்வியை வழங்கி வருகின்றன.
தேசிய மற்றும் சர்வதேசத் தரவரிசைகளிலும் இப்பல்கலைக்கழகம் முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. NIRF 2025 தரவரிசையில், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 76-வது இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் 90-வது இடத்தையும் BIHER பெற்றுள்ளது. QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2026-ல் உலக அளவில் 551-600 என்ற வரம்புக்குள் இடம்பெற்றுள்ளதோடு, தெற்காசிய அளவில் 82-வது இடத்தையும் பிடித்துள்ளது. இது உயர்கல்வித் துறையில் இப்பல்கலைக்கழகத்தின் சீரான வளர்ச்சியையும், தரத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தலைவர் டாக்டர். அபிஜாத் சந்திரகாந்த் ஷேத் மாணவர்களிடையே உரையாற்றுகையில், “நோயாளிகள் கூறுவதை உற்று கவனித்து கேட்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். உங்களது சுய சிந்தனையையும் மருத்துவ ரீதியான முடிவெடுக்கும் திறனையும் ஒருபோதும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ சாதனங்களிடம் விட்டுக்கொடுக்காதீர். மனித நுண்ணறிவு, மருத்துவரீதியான கணிப்பு மற்றும் தொழில்முறை திறமை ஆகியவை தான் குணமாக்குவதில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். மனிதநேயத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். ஏனெனில், சக மனிதர்கள் மீதான கனிவும், கரிசனையும் மருத்துவச் சேவையின் ஆணிவேராக இருக்க வேண்டும். புதிய சவால்களை எதிர்கொள்ளவும், மருத்துவப் புதுமைகளை வரவேற்கவும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்கும் திறன்மிக்க மருத்துவர்களாக உருவாக நீங்கள் உறுதியேற்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மாறிவரும் சமுதாயத்தின் சுகாதாரத் தேவைகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு இணையாக மருத்துவக் கல்வியும் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். “மருத்துவத் துறை இன்று வியக்கத்தக்க பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. பாரம்பரிய உடல்சார்ந்த மருத்துவத்தைக் கடந்து, செயற்கை நுண்ணறிவு (AI), துல்லிய மருத்துவம், டிஜிட்டல் சுகாதாரம், தரவு சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் ரோபாட்டிக்ஸ் எனப் பல நவீன தொழில்நுட்பங்களை மருத்துவதுறை வரவேற்று செயல்பாட்டில் இணைத்துக்கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த புதுமையான முன்னேற்றங்களை கற்பனை செய்து பார்ப்பது கூட அரிதாகவே இருந்தது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆராய்ச்சி, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள், கூட்டு முயற்சிகள் மற்றும் தர அங்கீகார முன்னெடுப்புகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தும் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஷேத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மருத்துவத் துறையின் பல பரிமாண வளர்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ளவும், பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்த கற்றலின் மதிப்பை உணரவும், அனைவருடனும் இணைந்து குழுவாகச் செயல்பட்டு மருத்துவச் சேவையை வழங்கும் அணுகுமுறையை வளர்த்துக்கொள்ளவும் பல்கலைக்கழகத்தின் இத்தகைய முயற்சிகள் பெரும் பங்காற்றுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
BIHER பதிவாளர் டாக்டர். S. பூமிநாதன் பேசுகையில், “தேசியக் கல்வி கொள்கைக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். பல்துறை கற்றல், அனுபவ வழிக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் ஆகியவற்றில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது கல்விக் கட்டமைப்பானது, மாணவர்கள் வகுப்பறைகளைத் தாண்டி புதுமைகள், தொழில்முனைவோர் முயற்சிகள், சமூக சேவை மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் கற்றல் ஆகிய தளங்களில் தங்களை ஈடுபடுத்தி தங்களையும், சமூகத்தையும் மேம்படுத்த ஊக்குவிக்கிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஆராய்ச்சி என்பது BIHER-ன் அடையாளத்திலும் எதிர்கால வளர்ச்சியிலும் ஒரு முக்கியத் தூணாக விளங்குகிறது. எங்கள் ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்கோபஸ்’ தளத்தில் 12,802 ஆய்வுக் கட்டுரைகளையும், ‘வெப் ஆஃப் சயின்ஸ்’ தளத்தில் 5,463 ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். 2025-26 கல்வியாண்டில் மட்டும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து ரூ.16 கோடியை ஆராய்ச்சி நிதியாக எங்கள் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 431 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மையானது ஆராய்ச்சி, கல்விசார் பரிமாற்றங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து விரிவுபடுத்துகிறது.”
சுகாதார கல்வி மற்றும் சேவைகள் வழங்குவது BIHER-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மருத்துவக் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் சமூகம் சார்ந்த சுகாதாரச் சேவைகள் மூலம் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (SBMCH) இந்தப் பணிக்குத் தொடர்ந்து பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் 28 தேசிய மற்றும் 13 சர்வதேச மாநாடுகள் என மொத்தம் 41 மாநாடுகளையும், 61 தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வுகளையும், சிறப்பு விருந்தினர்கள் நிகழ்த்தும் பேருரைகளையும் ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் இப்பல்கலைக்கழகம் 1,406 காப்புரிமை விண்ணப்பங்களை செய்திருப்பதோடு, ஆறு சர்வதேச காப்புரிமைகள் உட்பட 97 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் ‘புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் அடைகாப்பு வளர்ச்சி மையம்’ தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் சிறந்த அறிவுசார் சொத்துரிமை மையத்திற்கான விருதை வென்றுள்ளது. மேலும், மருத்துவச் சேவைகள், சுகாதாரக் கல்வி மற்றும் நோய்த்தடுப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் 384 சமூகப் பணி சார்ந்த நிகழ்வுகளையும் இந்நிறுவனம் சிறப்பாக நடத்தியுள்ளது.
