புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆறாவது புத்தகத் திருவிழாற்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்துகிறது.
இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் விழாவில் இந்திய விஞ்ஞானிகள், கவிஞர்கள், விருதுபெற்ற முன்னணி எழுத்தாளர்கள், திரைப்பட பாடலாசிரியர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு மாலைநேரங்களில் உரையாற்றுகிறார்கள், அதேபோல காலை நேரங்களில் மாணவர்கள் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியல் அற்புதங்கள், மந்திரமா தந்திரமா, கணக்கும் இனிக்கும், காகித மடிப்பு கலை, கோளரங்கம், அறிவியல் விளையாட்டுகள் போன்றவைகளும் மாணவர்களின் மாலை நேர கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில் 10 நாள்களும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் எனவும், புத்தகத் திருவிழா மாணவர்களுக்கு வாசிக்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும். பாடப்புத்தகத்தை தாண்டி வாசிப்பதற்கு புத்தகத் திருவிழா வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது என்று பேசினார். இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் தமிழ்ச்செல்வி, வளநிஷா, ஜான்சி, சௌமியா ஆகியோர் கலந்து கொண்டனர்.