:
நெல்லை.ஆக.08
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, நெல்லையில் திமுக மத்திய மாவட்டச் செயலாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் இருந்தார். இவரது ஆதரவில் நெல்லை மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணன், துணை மேயராக கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளடைவில் மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வகாப்பிக்கும், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் ஆகியோருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அன்றைய மத்திய மாவட்ட திமுக செயலாளர் மூலம் நெல்லை மாநகராட்சி மேயரை மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர். “குழம்பிய குட்டைக்குள் மீன் பிடித்த கதையாக” இந்த அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி தான் மேயராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, அன்றைய மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ., பக்கம் நின்றார்.
இந்த அரசியல் கோஷ்டி கலவரம் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் காணப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஏற்பாட்டின் பேரில், நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சியின் மைய அலுவலக வளாகத்தின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் “துணை மேயர் ராஜூ ஆப்சென்ட்” ஆனார். நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம். மைதீன்கான், கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.,யும், மேனாள் மேயருமான விஜிலா சத்யானந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ். லட்சுமணன், என்.மாலைராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் பொன்னையா பாண்டியன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.