திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன.

திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும் புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன. சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர், அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள், அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப் பல புராண வரலாறுகளும் சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.