சென்னை, பிப். 8- தங்களது சமூக மக்களை ஒன்றிணைக்கவும், அவர்களின் கலாச்சார உறவுகளைப் பலப்படுத்தவும் கம்மா குளோபல் பெடரேஷன் மாநாடு இன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடந்த 2024-ல் இந்த பெடரேஷன் துவங்கப்பட்ட பிறகு, இந்த சமூக மக்கள் பங்கேற்ற மிகப் பிரமாண்ட கூட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
உலகம் முழுவதும் உள்ள கம்மா சமூகத்தினரை ஒன்றிணைக்கவும், அவர்களின் கலாச்சார உறவுகளைப் பலப்படுத்தவும் கம்மா குளோபல் பெடரேஷன் துவங்கப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு உலகளவில் சுமார் 2.1 கோடி மக்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. இது இந்திய மக்கள் தொகையில் சுமார் 1.5 சதவீதமாகும்.
இந்த மாநாடு துவக்கத்திற்கு முன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாநாட்டைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக இந்த அமைப்பு செய்த பணிகளை குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் மண்டலப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, உறுப்பினர்களின் வளர்ச்சியைப் பற்றியும், மாநில மற்றும் வெளிநாட்டுப் பிரிவுகளை அமைப்பின் கட்டமைப்பிற்குள் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது பற்றியும் விவாதித்தனர்.
மாநாட்டில் கம்மா குளோபல் பெடரேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெட்டி குசும குமார் பேசுகையில், சமூகத்திற்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு பொதுவான தளம் தேவை என்பதை இந்த மாநாடு நமக்கு காட்டுகிறது. கடந்த ஓராண்டில் நமது கூட்டமைப்பு சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக நமது எண்ணங்களையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க இதுபோன்ற நேரடி சந்திப்புகள் மிகவும் அவசியமாகி உள்ளன. அமைப்பை வலுப்படுத்துதல், மண்டலக் கிளைகளின் தொடர்ச்சியான பங்களிப்பு, மற்றும் கூட்டமைப்பு தொடர்ந்து தெளிவாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளில் குறைந்தது 30 கம்மா எம்.எல்.ஏ-க்களையாவது வெற்றிபெறச் செய்வதும், நீண்ட கால அடிப்படையில் எதிர்கால அரசுகளில் துணை முதல்வர் பதவியைப் பெறுவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
கம்மா சமூகத்துடனான வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டே இந்த மாநாடு தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 65 லட்சம் கம்மா சமூக மக்கள் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சென்னை-காஞ்சிபுரம் உள்ளிட்ட இந்தப் பகுதிகள், 1930 முதல் 1932 வரை பழைய சென்னை மாகாணத்தின் அமைச்சராக இருந்த பொல்லினேனி முனுசாமி நாயுடு, ஆற்காடு வீராசாமி நாயுடு மற்றும் வைகோ போன்ற இச்சமூகத்தின் முக்கியத் தலைவர்களுடன் நீண்டகாலத் தொடர்புடையவை. மேலும், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் மற்றும் தென்னிந்திய வரலாற்றில் போற்றப்படும் ராவெல்லா, பெம்மசானி வம்சாவளியினரின் பாரம்பரியமும் இப்பகுதிக்கு உண்டு. தென்னிந்தியாவின் முக்கியத் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இச்சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஜி.டி. நாயுடு போன்றவர்கள் பொறியியல் மற்றும் போக்குவரத்துத் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இச்சமூகத்தைச் சேர்ந்த பலர் விவசாயம், தொழில் மற்றும் கல்வித் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுடன் மாநாடு நிறைவுபெற்றது. மேலும், இந்த பெடரேஷன் விரிவாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, வரும் மாதங்களில் மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற கூட்டங்கள் நடத்தப்படும் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
