கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ராவன மாத மூன்றாவது சனிக்கிழமை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஸ்ரீ கிரி மலை மீது தட்சிண திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் இந்த திருக்கோவிலில் ஸ்ராவன மாத சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ராவன மாத மூன்றாவது சனிக்கிழமை திருவிழா இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே மூலவர் சுவாமி வெங்கடேஸ்வரருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து திவ்ய மலர்களால் பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சர்வ தரிசன காட்சியில் சுவாமி அருள் பாலிக்க ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து சேவித்தனர்.
இதனை ஒட்டி திவ்ய மங்கள இசை நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. கோனேரிப்பள்ளி பாலகிருஷ்ணன் குழுவினரால் சங்கீர்த்தனை நிகழ்த்தப்பட்டது.
பெங்களூரு சினேகா ஸ்வரலயா பஜனை குழுவினரால், நாம சங்கீர்த்தனை பத்திஸ்ரத்தையுடன் பஜனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பரதநாட்டியம் கர்நாடக இசை சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததை அடுத்து அவர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை வெங்கடேஸ்வர சுவாமி சேவா டிரஸ்ட் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.