அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும் மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் (Single Use Plastic) தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பையைப் பயன்படுத்தவும் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை 23.12.2021 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும் மற்றும் “மீண்டும் மஞ்சப்பை” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்றையதினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இம்மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவியர்கள். பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் சார்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தை சென்றடைந்தது. இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்ற ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.5000 வென்ற செ.ஹரிதாஸ் உட்கோட்டை, இரண்டாம் பரிசு ரூ.3000 வென்ற செ.ஹரிஹரன் உட்கோட்டை, மூன்றாம் பரிசு ரூ.2000 வென்ற ப.வல்லரசு மாடர்ன் கல்லூரி, ஜெயங்கொண்டம் ஆகியோருக்கு பரிசுத்தொகையும், பங்கேற்பு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.5000 வென்ற ஜெ.ஜெயராணி, மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்தனூர், இரண்டாம் பரிசு ரூ.3000 வென்ற எஸ்.ரித்திகாஸ்ரீ, அரசுநகர் மெட்ரிக் பள்ளி, அரியலூர், மூன்றாம் பரிசு ரூ.2000 வென்ற வி.மோனிகாஸ்ரீ, அரசுநகர் மெட்ரிக் பள்ளி, அரியலூர் ஆகியோருக்கு பரிசுத்தொகையும், பங்கேற்பு சான்றிதழ்களையும், இதே போன்று ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவுகளிலும் அடுத்ததாக வந்த ஏழு வெற்றியாளர்களுக்கு ரூ.500 பரிசுத் தொகையும், பாரட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் பங்குப்பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுபோன்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் மூலம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் .ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் .பா.அகல்யா, மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.