நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடந்தது. கல்லூரியின் செயலர் முனைவர் புஷ்பராஜ் வரவேற்றார். மதுரை மாநில இயேசு சபைத் தலைவர் முனைவர் தாமஸ் அமிர்தம் மற்றும் தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் முனைவர் ஹென்றி ஜெரோம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் மரியதாஸ், “நூறு ஆண்டுகள் கொண்ட சவேரியார் கல்லூரியின் வரவாறு” குறித்த அறிக்கையை வாசித்தார்.

    இதனைத் தொடர்ந்து நடந்த சிறப்புக் கூட்டத்தில் “இந்தியாவின் நிலவு மனிதர்”  என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக முன்னாள் இயக்குநரும், சந்திராயன், மங்கள்யான் போன்ற வெற்றித் திட்டங்களின் இயக்குநருமான பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கல்லூரியின் “நூற்றாண்டு நினைவு மலர்”  சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அதன் பிரதியை சிறப்பு விருந்தினரான பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, மதுரை மாநில இயேசு சபைத் தலைவர் முனைவர் தாமஸ் அமிர்தம் அடிகளார்  பெற்றுக் கொண்டார். மேலும் இந்த விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், நியூஸ்7 தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநருமான சுப்பிரமணியன், கல்லூரியின் முன்னாள் மாணவரும், மத்திய கலால் மற்றும் சுங்கவரித் துறையின் ஓய்வு பெற்ற முன்னாள் இணை ஆணையருமான பால் முகமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் தூய சவேரியார் கல்லூரியின் இணை முதல்வர் சேவியர் இன்னசென்ட் நன்றி கூறினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் ஜோக்கிம் மற்றும் கணிப்பொறியியல் துறை பேராசிரியை முனைவர் ரெக்ஸி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.