
குருந்தன்கோடு வட்டாரத்தில் மாவிளைப் பகுதியில் வசிக்கும் வேளாண் விவசாயி செந்தில்குமார் வாழைத் தோட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் “வாழைத்தார் உறை” பற்றிய செயல் விளக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விவசாயிகளுக்கு வழங்கினர்.தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவர்கள் ஒரு குழுவாக வெளிச்சந்தை ஊராட்சியில் தங்கி ஊரக வேளாண்மை கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.”வாழைத்தார் உறை” என்பது வாழையின் தாரினை துளையிடப்பட்ட பாலித்தீன் பைகள் அல்லது சாக்குகளை கொண்டு மூடுவதாகும்.இதன் மூலம் வாழைத்தாரினை வெயில், அனல் காற்று மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்கலாம்.இவ்வுறையானது வாழைப்பழங்களின் நிறத்தைப் பாதுகாப்பதுடன் தரத்தினை மெருகேற்றுகிறது. இதன் மூலம் வாழைப்பழங்களின் ஆயுட்காலம் மற்றும் சந்தை மதிப்பு கூடுகிறது.கூடுதலாக வாழை பயிரினைத் தாக்கும் நோய்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் குறிப்பாக வாழையைத் தாக்கும் மாவுப்பூச்சியின் தாக்கத்தினைப் பெருமளவு குறைக்கலாம். இதன் மூலம் வாழையின் மகசூல் 15 முதல் 20% அதிகரிக்கும்.ஊரக வேளாண்மை கள ஆய்வு பணியின் ஒரு பகுதியாக மாணவர்கள் கௌதம்,பால முருகன், அருண்குமார், நிர்மல் பாரதி, பாரதி, அருண் குமார், சந்தீப், குமரன், கதம் வெங்கட சாய் கிருஷ்ணா ஆகியோர் விவசாயிகளுக்கு “வாழைத்தார் உறை” பற்றிய செயல் விளக்கத்தையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும், இதன் மூலம் வாழைப்பழத்தின் தரம் உயர்த்தப்படுவதையும் தெளிவுபடுத்தினர்.