
இந்தியாவில் ஆட்டோ உதிரிபாக உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் லிமிடெட் (Tata AutoComp Systems Limited), இங்கிலாந்தைச் சேர்ந்த, முன்னதாக ‘ஐ.ஏ.சி. யு.கே.’ (IAC UK) என்று அறியப்பட்ட – ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் (Artifex Interior Systems Limited) நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகளை வாங்குவதாக அறிவித்துள்ளது.
ஆட்டிஃபெக்ஸ் நிறுவனம் 2024-25-ம் நிதி ஆண்டில் 296 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த பரிவர்த்தனை முடிவடைந்தபிறகு இந்நிறுவனம் டாடா ஆட்டோகாம்ப் குழும நிறுவனமாக மாறும். நிறுவன கையகப்படுத்தல் நிகழ்வானது வழக்கமான நிபந்தனைகள் மற்றும் அனுமதி அடிப்படையிலானது. டாகோ (TACO) ஏற்கெனவே ஜாகுவார் லேண்ட் ரோவர் வெஞ்சர்ஸ் லிமிடெட் (Jaguar Land Rover Ventures Limited) நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆட்டோமோடிவ் பி.எல்.சி. குழும நிறுவனமாகும். இது டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமாகும்.
இந்த நிறுவன கையகப்படுத்தல் மூலம் சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட நிறுவனமாக டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் வளரும். ஆட்டிஃபெக்ஸ் நிறுவனம் வாகன உள்புற உதிரி பாகங்களான – வடிவமைப்பு, உற்பத்தி ஒருங்கிணைப்பு, இன்ஸ்ட்ருமென்ட் பேனல், சென்டர் கன்சோல், டோர் பேனல் மற்றும் உள்புற பகுதிகள் தயாரிப்பில் முன்னணியில் திகழ்கிறது. இந்நிறுவனம் பயணிகள் கார் தயாரிக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), பி.எம்.டபிள்யூ. மினி (BMW Mini), பென்ட்லி (Bentley), ஐ நியோஸ் (INEOS) மற்றும் டொயோடா (Toyota) உள்ளிட்டவற்றுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து அளிக்கிறது. இந்தக் கையகப்படுத்தல் நடவடிக்கை மூலம் ஐரோப்பிய சந்தையில் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனம் மிகப் பெரிய ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனமாக தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாக சப்ளையை வலுப்படுத்தவும் இது உதவியாக அமையும்.
இந்தக் கையகப்படுத்தல் குறித்து டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. அர்விந்த் கோயல் கூறுகையில், “டாடா ஆட்டோகாம்ப் குழும நிறுவனங்களில் ஆட்டிஃபெக்ஸ் இணைவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். சர்வதேச அளவில் எங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதோடு வாகனங்களின் உற்புற அமைப்புகளில் எங்களின் நிபுணத்துவத்தை வலுப்படுத்த இது உதவும். ஆட்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் உயர்நுட்ப உற்பத்தித் திறன் மற்றும் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுடான தொடர்பு, ஐரோப்பிய சந்தைகளில் எங்களை வலுப்படுத்திக் கொள்ள உதவுவதோடு மிகவும் உயரிய தீர்வுகளை அளிப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சியை எட்ட துணை புரியும்” என்று குறிப்பிட்டார்.