சென்னை, ஜனவரி 2026: எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள், முற்றிய நிலை நாக்கு புற்றுநோயால் (ஸ்குவாமஸ் செல் கார்சினோமா) பாதிக்கப்பட்ட புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள 41 வயது ஆணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். சுமார் 5 × 3 செ.மீ அளவுள்ள இக்கட்டி செங்குத்தாக பரவி, நாக்கின் முன்பகுதி முழுவதும், வாயின் அடிப்பகுதி மற்றும் நாக்கை தாங்கும் மேல் கழுத்து எலும்பான ஹையாய்டு எலும்பு வரை பரவியிருந்ததால், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு வேறு பல மருத்துவமனைகளில் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று இந்நோயாளிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நோயாளிக்கு ‘காம்போசிட் ரிசெக்ஷன்’ எனப்படும் ஒரே நேரத்தில் செய்யப்படும் விரிவான அறுவை சிகிச்சை செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் பாதித்த திசுக்கள் அனைத்தையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இதில் நாக்கின் முன்பகுதியை முழுமையாக அகற்றுதல் (ஆண்டீரியர் டோட்டல் குளோசெக்டோமி), வாயின் அடிப்பகுதியில் உள்ள புற்றுநோய் பாதித்த திசுக்களை அகற்றுதல் மற்றும் தாடை எலும்பின் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுதல் (செக்மெண்டல் மேண்டிபுலெக்டோமி) ஆகியவையும் அடங்கும். இந்தச் செயல்முறையில் ஹையாய்டு எலும்பையும் அகற்றுவது அவசியமாக இருந்தது.
புற்றுக்கட்டி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, மருத்துவர்கள் ‘ஃப்ரீ ஃபிளாப் மறுசீரமைப்பு’ என்ற நவீன உத்தியைப் பயன்படுத்தி நாக்கு மற்றும் வாயை மறுவடிவமைப்பு செய்தனர். இதில் உடலின் மற்றொரு பகுதியிலிருந்து ஆரோக்கியமான திசு எடுக்கப்பட்டு நாக்கில் இயல்பான வடிவத்தையும், அதன் செயல்பாட்டையும் திரும்பவும் கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்டது. சிகிச்சையின் இறுதி நடவடிக்கையாக, நுண்ணிய அளவில் எஞ்சி இருக்கக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கவும், முழுமையான புற்றுநோய் கட்டுப்பாட்டை உறுதி செய்யவும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நுட்பமான செயல்முறைகளை பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இடம்பெற்றிருந்த மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு மேற்கொண்டது. இக்குழுவில் புற்றுநோயியல் துறையின் இயக்குனரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம்.ஏ. ராஜா, அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். சிவராம் கணேசமணி, டாக்டர் மணிகண்டன் வெங்கடசுப்பிரமணியன், மூத்த ஆலோசகர் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. சிவ குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தச் சிகிச்சை குறித்து டாக்டர் ராஜா கூறுகையில், “புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட இந்நோயாளிக்கு நாக்கில் நீண்ட நாட்களாக ஆறாத புண் மற்றும் இயல்புக்கு மாறான அதிக திசு வளர்ச்சி இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் நாக்கின் முன்பகுதி மற்றும் வாயின் அடிப்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பயாப்ஸி சோதனையில் இது வாய் புற்றுநோயின் பொதுவான வகையான ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்பது உறுதி செய்யப்பட்டது. முழு உடலுக்குமான பெட் ஸ்கேன் (PET scan) சோதனை மூலம் மேற்கொண்ட ஆய்வில், புற்றுக்கட்டி திசுக்களில் ஆழமாக ஊடுருவி ஹையாய்டு எலும்பு வரை பரவியிருந்தது தெரியவந்தது,” என்றார்.
அவர் மேலும் விளக்குகையில், ”நோயின் முற்றிய நிலை மற்றும் நோயாளியின் இளவயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய கீமோதெரபி அளிக்க பல்துறை மருத்துவக் குழு பரிந்துரைத்தது. இது கட்டியைச் சுருக்கவும், அறுவை சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்தவும் உதவும். இரண்டு சுழற்சியாக வழங்கப்பட்ட கீமோதெரபிக்குப் பிறகு எடுக்கப்பட்ட பெட் ஸ்கேன், பகுதியளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை காட்டியது. அதன் பிறகு செய்யப்பட்ட மறுமதிப்பீட்டைத் தொடர்ந்து இந்த நுட்பமான அறுவை சிகிச்சைக்கு நோயாளி அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
டாக்டர். சிவராம் கணேசமணி பேசுகையில், “சாத்தியமற்ற மருத்துவ சூழல் நிலவியபோதும் கூட சிறப்பான சிகிச்சை விளைவுகளில் அடங்கியிருக்கும் இந்த நேர்வு, பல்வேறு மருத்துவ பிரிவுகள் மற்றும் அணுகுமுறையின் நிபுணத்துவம் செயல் வடிவில் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நபருக்கான சிகிச்சை செயல்பாட்டில் ஈடுபட்ட ஒவ்வொரு சிறப்பு நிபுணரும், மருத்துவ செயல்நேர்த்திக்காக பாராட்டப்படுவதற்கு உரியவர்கள்,” என்று கூறினார்.
வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சை முறையை விளக்கிய டாக்டர் மணிகண்டன் வெங்கடசுப்பிரமணியன், “இந்த அறுவை சிகிச்சையில் ஆண்டீரியர் டோட்டல் குளோசெக்டோமி மூலம் நாக்கின் முன்பகுதி முழுவதையும், வாயின் அடிப்பகுதி முழுவதையும் அகற்றினோம். கூடுதலாக, வலது பக்க தாடை எலும்பின் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றும் சிகிச்சைகளோடு, ஹையாய்டு எலும்பும் அகற்றப்பட்டது. இத்தகைய பெரிய அறுவை சிகிச்சையின் வடுவை மறைக்கவும், வாய் மற்றும் நாக்கின் இயக்கத்திறனை இயல்பாக தக்கவைக்கவும், மேம்பட்ட ‘ஃப்ரீ ஆன்டரோலேட்டரல் தொடை (ALT) ஃபிளாப்’ முறையை மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. இதில் நோயாளியின் இடது தொடையிலிருந்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான திசுவைக் கொண்டு, வாயில் அகற்றப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டன. நோயாளி தற்போது நோய் பாதிப்பு இல்லாமல் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்,” என்றார்.
ஊடகத் தொடர்பு: மகேஷ் குமார் @ 98845 45000
