சென்னை, மார்ச் –
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ளஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூராலஜி (ஏஐஎன்யு), அன்றாட உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் மறைமுக ஆபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள் குறித்தும் விளக்கும் வகையில் “ரொம்ப உப்பு… ரொம்ப ரொம்ப தப்பு” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கத்துடன், 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 12 முதல் மார்ச் 31 வரை இலவச சிறுநீரக பரிசோதனையை இம்மருத்துவமனை மேற்கொள்ள உள்ளது.
அதிக உப்பு உட்கொள்வதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். அதிகப்படியான உப்பை உட்கொள்வது ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் மற்றும் நீண்டகால உயர் ரத்த அழுத்தத்திற்கும் முக்கிய காரணமாகும். இதுவே சிறுநீரக பாதிப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கிறது.
இம்மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் எம். நவிநாத் இது குறித்து கூறுகையில், “நமது அன்றாட உணவில் நாம் சாதாரணமாகச் சேர்க்கும் அதிகப்படியான உப்பு, காலப்போக்கில் சிறுநீரகங்களை பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தமே நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ‘ரொம்ப உப்பு… ரொம்ப ரொம்ப தப்பு’ என்ற இந்த பிரச்சாரத்தின் மூலம், உணவில் செய்யும் சிறிய மாற்றங்களும், முறையான மருத்துவப் பரிசோதனைகளும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். சிறுநீரக நோயானது முற்றிய நிலையை அடையும் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும்என்பதால், இதனை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியமாகும்” என்றார்.
நிர்வாக இயக்குனரும், தலைமை சிறுநீரக மருத்துவரும், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அருண் குமார் பாலகிருஷ்ணன் கூறுகையில், “சிறுநீரக நோய்க்குச் சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் அதனைத் தடுப்பதே எங்கள் மருத்துவமனையின் நோக்கமாகும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. உலக சிறுநீரக தினத்திற்கான இந்த முயற்சி, குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து, தங்களுக்கு உள்ள உடல்நல பிரச்சினைகளை முன்கூட்டியே புரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது. அதிக உப்பை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதன் மூலமும், தடுப்பு சிகிச்சைகளை ஊக்குவிப்பதன் மூலமும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி, சிறுநீரக நோயின் பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சாரத்தின் மூலம், வாழ்க்கை முறை மாற்றங்களை ஊக்குவிக்கவும், நோயை முன்கூட்டியே கண்டறியவும், நீண்டகால சிறுநீரகப் பாதிப்புகளைத் தடுக்கவும் இம்மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனையானது ‘பிரத்யேக உயர் ரத்த அழுத்த கிளினிக்’மூலம் பொதுமக்களைச் சென்றடையும் பணியைத் தீவிரப்படுத்தும். இது தனிநபர்கள் தங்கள் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரிசெய்ய முடியாத சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே உரிய மருத்துவச் சிகிச்சையைப் பெற உதவும்.
விழிப்புணர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிறப்புச் சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், மக்கள் தங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவும், சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயின் பாதிப்பை குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த பிரச்சாரத்தை ஏஐஎன்யுமருத்துவமனை துவக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
