
மதுராந்தகம், செப்.2 –
மதுராந்தகத்தில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், நகராட்சி கமிஷனர் சுகேந்திரன் மற்றும் மத்திய மக்கள் தொடர்பாக இயக்குனர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர் .
இதில், மதுராந்தகம் கோட்டாட்சியர் நரேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது : மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பற்றிய பல்வேறு அரசு துறைகளின் குறிப்புகள், பதாகைகள், அரங்குகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இங்கு, ஆதார் திருத்த மையம், வேளாண் அரங்கம், மாவட்ட முன்னோடி வங்கியின் கல்விக்கடன், தொழில் கடன் அரங்கம் உள்ளிட்ட ஏராளமான அரங்ககள் அமைக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதி மக்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.
இன்றும் முகாம் நடைபெறும், என்று அவர் பேசினார்.
இந்நிகழ்வில்
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி, புதுச்சேரி, ஜெயகணேஷ், வேலூர் மற்றும் வங்கி அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
