வணிகவியல்துறை தேசியக் கருத்தரங்கு!

நெல்லை.செப்.02
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் “சந்தைப்படுத்தலில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு: இணையப் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு கல்லூரியின் நூற்றாண்டுக் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் பெலிசியா கிளாடிஸ் சத்தியதேவி தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் அருட்தந்தை டி.சௌந்தரபாண்டியன் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஜெயப்பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.எபநேசர் வரவேற்றார்.
முற்பகல் அமர்வில் பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலைக்கழக மேலாண்மையியல் உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.அமுதன் மற்றும் கிறிஸ்து ஜெயந்தி பல்கலைக்கழக தொழில்முறை கணக்கியல் மற்றும் நிதியியல் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ.பூர்ணிமா, நாகர்கோவில் சுங்கன்கடை சேவியர் கத்தோலிக்கக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மேலாண்மைத்துறைத் தலைவர் முனைவர் வி.டார்லிங் செல்வி ஆகியோர் கலந்துகொண்டு, “சந்தைப்படுத்துதலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு” உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
பிற்பகல் அமர்வில் சாராள் தக்கர் கல்லூரி வரலாற்றுத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ம.வைஜோ பிரேமா நிறைவு உரையாற்றினார். நிகழ்வில் முனைவர் இ.ஏஞ்சல் சாராள் ரோஸ், சுயநிதிப் பிரிவுத் தலைவர் முனைவர் த.பொன்ராணி, பேராசிரியர்கள், ஆய்வு மாணவியர் மற்றும் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி கோ.ஆர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாராள் தக்கர் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ச.காஞ்சனா மற்றும் கருத்தரங்கம் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.கமலா ஜூலியட் ஐசக் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.
