
திருவண்ணாமலை, செப்.30
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தொடங்கி வைத்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டாரங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
பெண்களின் உழைப்புக்கு புதிய
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், குழு உறுப்பினர்களின் வருமானம் அதிகரிப்பதுடன், அவர்களின் பொருளாதார சுயநிலையும் மேம்படும்.
கண்காட்சி அரங்குகளில் மகளிர் குழுக்கள் தயாரித்த சிறுதானிய வகைகள், தேன், எண்ணெய் வகைகள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆடைகள், சோப்பு, சலவைத் தூள், விதைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்து, பெண்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி ஆதரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பெண்களின் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய சந்தை கிடைக்கச் செய்வதன் மூலம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் இ.ரேவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
