திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனைகள், பூஜைகள், திருவிழாக்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக உற்சவர்களான சீதா, ராம, லட்சுமணர் விமான பிரகாரமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சாத்துமுறை, ஆஸ்தானம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான சீதா, ராமா், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.