சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் கிராஸ்ஒவர், C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை  ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலன்கள் 2022 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு பொருந்தும், இவை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல்- ஷைன் என்று அழைக்கப்படும் ஒற்றை, ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் போக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. சமீபத்தில் தான் சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் நான்காவது கார் மாடல் ஆகும். சிட்ரோயன் C3 மாடலை போன்ற ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் C3 ஏர்கிராஸ் மாடல் ஸ்டைலிங் அதன் முந்தைய மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிய காரின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.