ஜெ. ஆட்சியில் இப்படி செய்ய முடியுமா? என புலம்பும் தொண்டர்கள்:

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணனுக்கும், அப்போதைய நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.,வுக்கும் பணிப் போர் நடந்ததால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு கட்சியின் தலைமை வரை புகார் சென்றது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.

     இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்ததுடன், மாநகராட்சி அதிகாரிகளும், நெல்லை மாநகரப் பொதுமக்களும் எந்த வேலையும் நடைபெறவில்லையே என்று வருத்தப்பட்டு வந்தனர். இந்தநிலையில் திமுக நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., விடுவிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் இல்லாமல் இனி செயல்படுவார்கள் என கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிர் மாறாக முன்னாள் மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வஹாப் மூலம் கவுன்சிலர் பொறுப்பை பெற்ற மாமன்ற உறுப்பினர்களும், மண்டலத் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் பலர், மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.,வின் வழிகாட்டுதலின்படி தனி அணியாகவே செயல்பட்டு வந்தனர். இத்தகையச் செயல் “மழை நின்றும், தூறல் இன்னும் நிற்கவில்லை”  என்கிற நிலையை ஏற்படுத்தியது.

     இந்நிலையில் நெல்லை மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டுக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்தல் நெல்லை மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நெல்லை மாநகராட்சியின் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கூட்டம் ஆரம்பித்த சில மணித்துளிகளில் திமுக கவுன்சிலர்கள் பலர் நெல்லை மேயருக்கு எதிராகவும், திமுக மாவட்டப் பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கானுக்கு எதிராகவும், “மாமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்”  விடுத்ததாகக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டம் நடத்தினர்.

     இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, “அரசியல் பேசுவதற்கு வேறு தளம் இருக்கிறது; தற்போது கூட்டத்தை நடத்துவோம் அனைவரும் அமருங்கள்” என்று கவுன்சிலர்களிடம் எவ்வளவோ! முயற்சி செய்து பேசினார். துணை மேயர் கே.ஆர்.ராஜுவும் கவுன்சிலர்களை சமரசம் செய்து பார்த்தார். ஆனால் திமுக கவுன்சிலர்கள் சபையை நடத்த விடவில்லை. எனவே நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், கூட்டத்தை ஒத்தி வைத்தார். இந்த சம்பவங்களைப் பார்த்த பொதுமக்களும், சில கவுன்சிலர்களும் கட்சியின் தொண்டர்களும், கட்சித் தலைமைக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே! போர்க்கொடி தூக்குகிறார்களே! இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தால் ஜெயலலிதாவின் கட்டளைக்கு எதிராக யாராவது செயல்பட முடியுமா? என புலம்பினர். இச் சம்பவங்களால் திருநெல்வேலி மாநகராட்சியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.