தென்காசி மாவட்டம் கருவந்தா ஊராட்சிக்கு உட்பட்ட சோலைச்சேரி கிராமம் அம்பேத்கர் நகர் தெருவைச் சேர்ந்த புதியான்சாம்பான் என்பவருக்கு சொந்தமான 2.64 செண்ட் நிலம் உள்ளது, புதியான்சாம்பான் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு சொந்தமான வீட்டில் அவரது பேரன் துரைராஜ் வயது 85 தனது மனைவி 75 வயதான மேரி புஷ்பத்துடன் வசித்து வருகின்றனர். தள்ளாடும் வயதில் நிம்மதியாக சென்ற முதியவர்களின் வாழ்வில் வீட்டின் அருகே துரைராஜ்க்கு பாத்தியப்பட்ட 1.64 செண்ட் நிலத்தை அருகில் வசித்து வரும்அந்தோணி என்பவர் தனது மனைவி ஆரோக்யம் பெயரில் கிராம நிர்வாக அலுவரிடம் பத்து ஒன்னு அடங்கலை பெற்று அதன் மூலம் போலியான ஆவணங்களை வைத்து துரைராஜ்க்கு சொந்தமான 1.64 செண்ட் நிலத்திற்கு பட்டா பெற்றதாகக் கூறப்படுகிறது.மேலும் ஆரோக்யம் மற்றும் அவரது குடும்பத்தினர் 1.64 சென்ட் நிலத்தில் வீடு கட்ட முயற்சி செய்த விஷயம் முதியவர் துரைராஜ்க்கு தெரிய வர ஆரோக்கியத்திடம் கேட்ட போது அவரது குடும்பத்தினர் முதியவர் என்று கூற பார்க்காமல் தாக்கியதாகவும், அவர் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும்கூறப்படுகிறது.போலியான ஆவணங்கள் மூலம் பூர்வீக நிலத்தை அபகரித்தது குறித்தது முதியவர் துரைராஜ் தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாசியர், பத்திரப்பதிவு அலுவலகம், ஊத்துமலை காவல் நிலையம் ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தும் முதியவரின் அழுகுரல் அதிகாரிகளின் செவிகளுக்கு இதுவரை எட்டவில்லை.முதியவர் துரைராஜ்க்கு பாஸ்கர் என்ற மகனும், ஜூலியட், செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். தந்தையின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகள் ஜூலியட் கொடுத்த புகார் மனுவையும் அதிகாரிகள் செல்லா காகிதமாகவே கிடப்பில் போட்டு விட்டனர் என்றும் கூறப்படுகிறது. தள்ளாடும் 85 வயதிலும் பூர்வீகமான 1.64 செண்ட் நிலத்தை மீட்கப் போராடி வரும் தம்பதியினருக்கு நியாயம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.