ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி தொடா்பான பள்ளித் தூய்மை உறுதிமொழியேற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்க எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை, இளைஞா் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் (சமக்ர சிக்ஷா) செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையுடன் சுகாதாரத் துறை, வனத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, மாநகராட்சி அலுவலா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.மேலும் பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ஆட்சியா் விதைகளை தூவினாா்.இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குழந்தைராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) ஜோதி சந்திரா, உதவித் திட்ட அலுவலா் (சமக்ர சிக்ஷா) ராதாகிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியா் மாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.