
முன்னாள் தலைமைச் செயலர் முனைவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., ஈரோட்டில் இயங்கி வரும் சக்திதேவி அறக்கட்டளை சார்பில், அண்மையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
சக்திதேவி அறக்கட்டளை, 22 ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வமைப்பின் சார்பாக ஈரோட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி, அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமினை முன்னாள் தலைமை செயலர் முனைவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்தார். அறகட்டளையின் அறங்காவலர்கள் முனைவர் பி.சி. துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி ஆகியோரது பணிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
சக்திதேவி அறக்கட்டளையின் ஓர் அங்கமாகிய சக்தி மருத்துவமனை, இலவச மருத்துவ ஆலோசனைகளையும், சலுகை விலையில் மருந்துகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது இலவச சிறப்பு மருத்துவ முகாமினையும் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை அமைப்புச்சாரா நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு செய்து, நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கி அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமினை சக்திதுரைசாமி திருமண மாளிகையில் நடத்தியது.
சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர் பி.சி. துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். முனைவர் பி.சி. துரைசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு, ராஜ கோபால் சுன்கரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார்.
முன்னாள் தலைமை செயலர் முனைவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளான 150 ஆட்டோ ஓட்டுநர்களைப் புதிதாகப் பதிவு செய்து நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் 2 செட் சீருடைகளையும் வழங்கினார்.
பிறகு அவர் பேசுகையில், “நான் 2007-ஆம் ஆண்டு சுற்றுலாத் துறை செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது 100 ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டுபிடித்து சுற்றுலா நட்பு வாகனம் என்று அறிமுகம் செய்து வைத்தேன். சுற்றுலாப் பயணிகளிடம் அவர்கள் எந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நேர்மையாக நடந்து கொண்டு, பயணிகளிடம் நியாயமான கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் தமிழகத்தின் பெருமைகளை அவர்கள் உணரச் செய்யும் வகையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். அந்த ஆட்டோ ஓட்டுநர்களின் 100 தொலைபேசி எண்களையும் வாங்கி இணையதளத்தில் பதிவு செய்து உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டோம்.
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இங்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் அந்த எண்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் சென்னை போன்ற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இதன் மூலம் அவர்களது வருவாயும் பெருகியது. நமது மாநிலத்தின் பெருமையும் உயர்ந்தது. அதேபோன்று ஈரோட்டிலும் சுற்றுலா நட்பு வாகனத்தை ஏற்படுத்தித் தர ஈரோடு கலெக்டர் முன் வரவேண்டும்.
மிகச்சிறந்த முறையில் பல ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்களான முனைவர் பி.சி. துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி ஆகியோரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்றார்.
ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரு. முருகேசன், விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் தன்வந்திரி மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.