சென்னை, பிப்ரவரி. 2026: ‘ஐபிஎம்ஏ குளோபல் ப்ராஜெக்ட் புரொபஷன் போரம்’ என்னும் சர்வதேச மாநாட்டை சிறந்த திட்ட மேலாண்மைக்கான உலகின் முன்னணி அமைப்பான ‘இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்’ நடத்த உள்ளது. இந்த மாநாட்டிற்கு, இந்தியாவின் திட்ட மேலாண்மை நிபுணர்களுக்கான அமைப்பான ‘ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் அசோசியேட்ஸ், இந்தியா’ ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் சிந்தனைத் தலைமை மற்றும் முக்கிய உத்திகள் சார்ந்த கலந்துரையாடல்கள் இடம் பெற உள்ளது. “திட்ட மேலாண்மை மூலம் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குதல்: செயற்கை நுண்ணறிவு, புதுமை மற்றும் நிலைத்தன்மையை ஏற்றுக்கொள்வது” என்பதை அடிப்படையாகக் கொண்டு இது நடைபெறுகிறது.
பிப்ரவரி 13-ந்தேதி அன்று காலை குத்து விளக்கேற்றி இந்த மாநாடு துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் அசோசியேட்ஸ், இந்தியாவின் தலைவரும், பிரம்மோஸ் நிறுவனர் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஏ. சிவதாணுபிள்ளை வரவேற்புரை ஆற்றுகிறார். ஐபிஎம்ஏ நிதி மற்றும் செயல்பாட்டு துணைத் தலைவர் விளாடிமிர் ஒப்ராடோவிக் இந்த மாநாட்டின் கருப்பொருள் குறித்து விளக்க உரையாற்றுகிறார். மாநாட்டை ஐபிஎம்ஏ தலைவர் மிலாடன் வுகோமனோவிக் துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் பிஎம்ஏ புரவலர் அனில் ரஸ்தான், இந்து குழும இயக்குனர் என். ராம், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், தொழில் துறை தலைவர்கள், உலகளாவிய திட்டத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் சார்ந்த நிலையான திட்டங்களை உருவாக்குவதில், திட்ட மேலாண்மையின் பங்கு குறித்து இவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். ஒரு நிறுவனம், நாடு மற்றும் உலகம் என அனைத்து நிலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதில் திட்ட மேலாண்மை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த மாநாடு வலியுறுத்த இருக்கிறது. வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலகளாவிய மாற்றத்திற்கு திட்ட மேலாண்மை எவ்வாறு உதவுகிறது என்பதையும் இந்த மாநாடு விவாதிக்க உள்ளது.
செயற்கை நுண்ணறிவு, திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நிர்வாகிப்பதிலும் எத்தகைய மாற்றங்களைச் செய்கிறது, புதிய கண்டுபிடிப்புகள் எப்படி மதிப்பை கூட்டுகின்றன, மற்றும் திட்டங்களை வடிவமைப்பது முதல் முடிப்பது வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகளை எப்படி இணைப்பது என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
இதில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய திட்டத் தலைமை மற்றும் நிர்வாகம், சிக்கலான திட்ட சூழல்களில் புதுமை மற்றும் செயல் வேகம், திட்டங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புகளை இணைத்தல், உலகளாவிய திட்டத் தொழில்முறைக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்கள் ஆகிய தலைப்புகளில் குழு விவாதம் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற உள்ளன.
இந்தியாவில் நடைபெறும் இந்த ‘ஐபிஎம்ஏ’ உலகளாவிய மாநாட்டில் பல்வேறு துறைகள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். அதேபோல, இந்தியாவில் உள்ள திட்ட மேலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பாகவும், நாடு முழுவதும் திறமையான திட்ட மேலாண்மையை வலியுறுத்தும் அமைப்பாகவும் ‘பிஎம்ஏ இந்தியா’ தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு மகாபலிபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
