சேலம் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குட முழுக்கை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமை தாங்கி நடத்தினார். அறக்கட்டளை அறங்காவலர் தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார். பொது செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார் .இதில் சேலத்தின் காவல் தெய்வமாக போற்றப்படும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட முழுக்கு விழா வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழாவின்போது கலசம், கருவறை, வேள்விச்சாலை ஆகிய மூன்று நிலைகளிலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளின் படி தமிழில் மந்திரங்கள் ஓதி கிரியைகள் செய்து நடத்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குச்சனூர் கிழார், சித்தர் மூங்கில் அடியார், மோகனசுந்தரம் ,வடிவேலன், சேலம் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.