தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களின் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் கீழே குறிப்பிட்டுள்ள உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, தரமான மற்றும் பாதுகாப்பான உணவை நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டியது உணவு வணிகர்களின் பொறுப்பாகும்.
அனைத்து இனிப்பு மற்றும் கார பலகாரத் தயாரிப்பாளர்கள்/விற்பனையாளர்கள், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். பலகாரப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றைத் தயாரிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை பலகாரத்தில் சேர்க்கக்கூடாது.
சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பலகாரங்களை பேக்கிங் செய்தாலும், கி/ப்ட் பாக்ஸாக தயாரித்தாலும், அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட லேபிள் விபரங்களை அவசியம் அச்சிடுதல் வேண்டும். உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் நெய் மற்றம் சமையல் எண்ணெய் விபரங்களை நுகர்வோர்களின் பார்வைக்குத் தெரியுமாறு கடையில் காட்சிப்படுத்த வேண்டும்.
சில்லறை விற்பனைக்காக உள்ள அனைத்து பலகார வகைகளையும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதிக் காலம் ஆகிய விபரங்களுடன் காட்சிப்படுத்த வேண்டும். பலகாரத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டை/பாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.
மேலும், தீபாவளி பலகாரத் தயாரிப்பில் ஈடுபடும் உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும், பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற அல்லது பாதுகாப்பற்ற பலகாரங்களைத் தயாரிப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே, பலகாரத் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ல் உள்ள உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை மிகுந்த கவனமுடன் பின்பற்ற வேண்டுமாய் எச்சரிக்கப்படுகின்றது.
மேலும், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற கடைகளில் மட்டும் பலகாரங்களை வாங்குமாறும், விபரச்சீட்டு உள்ள பலகாரங்களை மட்டும் வாங்கி உபயோகிக்குமாறும் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பலகாரங்களின் தரம் குறைபாடு அல்லது சுகாதாரமற்ற கடைகள் குறித்து நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், 0461-2900669 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தின் எண்ணிற்கு அழைத்தோ அல்லது 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.”