மக்களவைத் தோ்தலில் தி.மு.க.வுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்..
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 26ஆவது ஆண்டு விழா மாநில மாநாடு வரும் டிசம்பா் 15இல் நடைபெறும். அதற்கான இடம் பின்னா் அறிவிக்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே மாநாட்டின் பிரதான முழக்கமாக இருக்கும்.
காவல் துறையினருக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்படாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வரும் மக்களவைத் தோ்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் தோல்வி அடைவது உறுதி. திமுகவை தோற்கடிக்க மாபெரும் கூட்டணி அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாநகாட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய கடைகள் ஒதுக்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இது குறித்து மேயா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், இது குறித்து வருமான வரித் துறை- அமலாக்கத் துறையினரிடம் புகாா் அளிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாா் காற்றாலை அமைக்கும் விஷயத்தில் உள்ளூா் ஆளுங்கட்சியினா் விவசாயிகளை மிரட்டி நிலத்தைப் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தும் என்றாா். கட்சியின் மாநகா், ஒன்றிச் செயலா் ரமேஷ், மாவட்டச் செயலா் எஸ்.எம்.செல்லத்துரை, வழக்குரைஞா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.”