பிராட்வே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 3-வது திரைப்படமான ‘கருப்பு பக்கம்’ சென்ற 3-ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்பட்டது. தூத்துக்குடி ஸ்ரீபாலகிருஷ்ணா திரையரங்கில் தொடர்ந்து 7-வது நாளாம் இன்றும் (வியாழன்) திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்த விமர்சனங்களை தற்போது காண்போம்.

         படம் ஆரம்பிக்கும் போது 4 நிமிடம் கிராஃபிக்ஸ் உடன் கூடிய எழுத்து கட்டத்திலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. கதையின்படி தூத்துக்குடி சத்யா தியேட்டரில் கதாநாயகன் ராஜ்கபூர், சுமங்கலி சதீஷ்,, ஞான செல்வம் ஆகியோர் படம் பார்த்து கொண்டு இருக்கின்றனர். அந்த காட்சியில் இருந்து படம் திரில்லிங்காக நகர்கிறது. திரைப்படத்தின் ஸ்கிரீன்பிளே உயிரோட்டமாக உள்ளது.

          ஒவ்வொரு காட்சியிலும் கதாநாயகன் ராஜ்கபூர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் அவர் பயப்படுவது போல் நடித்து இருப்பது, நமக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது. ஆணவம் இல்லாத நடிப்பு சீரான முகத்தோற்றம் தேவையான இடத்தில் ஆக்ஷன் என்று கதாநாயகன் ராஜ்கபூர் மக்கள் மனதில் நிற்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சிகள் மற்றும் ராஜ்கபூர் பேசும் வசனங்கள் ஆக்ரோஷமாக இருக்கிறது.

         கதாநாயகன் கூடவே வரும் சுமங்கலி சதீஷின் நடிப்பு தனி ரகம், அவர் செய்யும் காமெடிகள் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது., எதார்த்தமான காமெடியில் கலக்கும் சுமங்கலி சதீஷ், படம் முழுவதும் கதாநாயகன் ராஜ்கபூருடனேயே பயணிக்கிறார். சுமங்கலி சதீஷ்  “ஏல உன் வேலை புண்ணாக்க பாருல..” என்றும், “சரசு… உரசு…” என்றும் பேசும் நகைச்சுவை வசனங்கள் அனைவரின் மனதிலும் ஒட்டி விடுகிறது.

         இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாய் இருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த சின்சி, கதாநாயகன் ராஜ்கபூருக்கு தங்கையாக நடித்து, சில காட்சிகளில் மக்களின் மனதில் அழுத்தமாக பதிகிறார். ஒரு காட்சியில் முகம் தெரியாத நபர்கள் போனில் மிரட்டும் போது நடிகை சின்சி வெளிப்படுத்தி இருக்கும் அழகான பயம் மக்களை ரசிக்க வைக்கீறது. டாக்டராக வரும் மெடிக்கல் உரிமையாளர் ஆர்.ஜெயம், இளைஞர்களின் நலனை கருதி, மதுவின் தீமை பற்றி கூறும் அறிவுரை பாராட்டக்கூடியதாக இருக்கிறது. ‘விதி எண் 3’ திரைப்படத்தில் வில்லியாக நடித்த சுசிலா இந்த படத்தின் தொடக்கத்தில் பயங்கரமாக மிரட்டி இருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் திரைப்படம் பேய் படமா என்று கேட்க வைக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பு எகிருகிறது. அம்மா வேடத்தில் வரும் சுகந்தி கோமஸ் எதார்த்தமாகவே நடித்து இருக்கிறார்.

         திரைப்படத்தில் மொத்தம் ஐந்து சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. முக்கிய வில்லனாக கொல்லம் கோபி பயங்கரமாக மிரட்டி இருக்கிறார். ஒரு சைக்கோ தனமான வில்லத்தனம் படம் பார்ப்பவர்களை பதட்டம் அடைய வைக்கிறது. வில்லன் அதிகம் பேசாமல் ஆக்ஷன் காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது. அடுத்த வில்லனாக வரும் தொழில் அதிபர் விபிஎம், பார்வையிலேயே மிரட்டுவது, அவரது அலட்டல் இல்லாத டயலாக் என தனி முத்திரை பதிக்கிறது.

         திரைப்படத்தின் முக்கிய நபராக வஜ்ரா ராம் வருகிறார், காவல் துறை உயர் அதிகாரி மற்றும் மிலிட்டரிகாரன் என இரண்டு வேடங்களில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களிலும் அதிக அழுத்தம் இருக்கிறது. பேச முடியாத மாற்றுத்திறனாளி வேடத்தில் உளவாளியாக வரும் பெரியவர் லிங்கம்  நாடாரின் நடிப்பு அபாரம்., கிளைமாக்ஸ் காட்சிகளில் தனது நடிப்பை அசத்தலாக வெளிப்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்ப வல்லுனராக நடித்திருக்கும் கோல்டு சின்னா பேசும் வசனங்கள் அனைத்தும் விழிப்புணர்வு பதிவாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் கதாநாயகன் ராஜ்கபூரை செல்போன் மூலமாக வழிநடத்தும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுபோக வில்லனின் அடியாட்களாக நடித்திருக்கும் நபர்கள் சண்டை காட்சிகளில் அருமையாக நடித்து இருக்கிறார்கள். தங்களுக்கு செல்போன் அழைப்பு மூலம் வந்த அச்சுறுத்தலால், பதற்றத்துடன் வரும் கதாநாயகன் ராஜ்கபூர் மற்றும் சுமங்கலி சதீஷ் ஆகியோரை வக்கீல் செங்குட்டுவன் பரபரப்பு ஏதுமில்லாமல் அமைதிபடுத்தும் காட்சி, கதைக்கு திடீர் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

         இப்படத்தில், காவல் அதிகாரிகளாக படத்தில் வரும் பாப்பா சங்கர், ஜெகதீஷ் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செய்தியாளராக நடித்துள்ள ராஜேந்திரபூபதி காவல்துறை உயர் அதிகாரிடம் கேட்கும் கேள்விக்கு, அதிகாரி தெரிவிக்கும் பதில்கள், அனைவரையும் விழித்தெழ செய்கிறது.

          மொத்தத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாதி சஸ்பென்ஸ் திரில்லராகவும், இரண்டாம் பாதி அதிரடி ஆக்‌ஷன் படமாகவும் உள்ளது. கடைசி 20 நிமிடங்கள் பரபரப்பாக சண்டை காட்சிகள் நிறைந்ததாகவும் அதிரடியாக உள்ளது. இப்படத்தில் இசையின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாகவும் சிலர் குறைப்பட்டு கொண்டனர். குறிப்பாக, புதுமுகம் என்று யாரும் கூற முடியாத அளவில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். டப்பிங் பணிகளை சீலன் பிரமாதமாக செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என அனைத்தையும் தனித்திறமையுடன் கையாண்டு, அனைவரையும் யதார்த்தமாக நடிக்க வைத்து, சிறந்த விழிப்புணர்வு திரைப்படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் பிராட்வே சுந்தர்.  ‘கருப்பு பக்கம்’ என்பது படம் மட்டுமல்ல…  நல்ல பாடம்..!