‘இப்கோ’ எனப்படும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் கடந்த ஆண்டிலிருந்து அதன் நிலையைத் தக்கவைத்து, உலகின் சிறந்த 300 கூட்டுறவு நிறுவனங்களில் நம்பர் 1-வது இடத்தைப் பிடித்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விற்றுமுதல் விகிதத்தின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இப்கோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்பதை இது குறிக்கிறது. ஒட்டுமொத்த விற்றுமுதல் தரவரிசையில் கடந்த நிதியாண்டில் 97-வது இடத்தில் இருந்த இப்கோ, 72-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்கோ அதன் 35,500 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவுச் சங்கங்கள், 25,000 பிஏசிஎஸ் மற்றும் 52,400 பிஎம்கேஎஸ்கே மையங்களுடன் இணைந்து ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘ஆத்மநிர்பர் கிரிஷி’ ஆகியவற்றை நோக்கி முன்னேறி வருகிறது.
இப்கோவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் உதய்ஷங்கர் அவஸ்தி, தொடர்ச்சியான ஆண்டுகளில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்திய கூட்டுறவு இயக்கத்தில் இப்கோவுக்கு இது பெருமையான தருணம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யவும், கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். புதுமையை நாங்கள் நம்புகிறோம். இந்த மகத்தான சாதனைக்காக இப்கோவில் உள்ள ஒவ்வொருவரையும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த கூட்டுறவு சகோதரத்துவத்தையும் நான் வாழ்த்துகிறேன்” என்றார்.