
தென்காசியில் மாவட்ட போக்குவரத்து காவல், தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
தமிழக அரசு ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் 31 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, பொதுமக்களுக்கு சாலை பயணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தின் இறுதிகட்ட பேரணியாக தென்காசியில் மாவட்ட போக்குவரத்து காவல், ஈதல் இதயம் அறக்கட்டளை மற்றும் தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் வரவேற்று பேசினார். ஆய்வாளர் மாணவர்களிடையே பேசும்போது, சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்றும், சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பதும் இதற்கு ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுகிறது என்றும், சாலை விதிகளை மதிப்போம் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் என்பதை அனைவரும் மனதில் கொண்டு சாலை விதிகளை கடைபிடிப்பதே உயிர் சேதத்தை பெரும்பாலும் தடுக்கக்கூடியதாய் இருக்கும் என்று தெரிவித்தனர். இப்பேரணியில் விபத்தில்லா தென்காசியை உருவாக்குவோம், தலைகவசம், சீட் பெல்ட் அணிந்து வாகனம் இயக்குவோம், பொறுப்புடனும், பொறுமையாகவும் வாகனங்களை ஓட்டுவோம் போன்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் 300க்கும் மேற்பட்ட அகாடமி மாணவ, மாணவியர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள், ஊர்வலமாக வந்தனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, தென்காசி பெரிய கோவில் முன்பு நிறைவு பெற்றது. ஈதல் இதயம் அறக்கட்டளை சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.