
ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்து செல்லும் வகையில் கூடுதலாக மினிபஸ்கள் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிய மினி பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் தூத்துக்குடியில் இருந்து 13 மினி பஸ்களும், கோவில்பட்டி ஊரில் இருந்து 18 மினி பஸ்களும், திருச்செந்தூர் ஊரில் இருந்து 25 மினி பஸ்களும் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏழை எளிய பொது மக்களின் வசதிக்காக 56 வழித்தடங்களில் புதிய மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்து செல்லும் வகையில் கூடுதலாக மினிபஸ்கள் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் ஆலோசனையின் பேரில் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவராமன் கார்த்திக் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் அளித்துள்ள கோரிக்கை முடிவில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,
ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லும் வகையில், ஆத்தூர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆத்தூர் வரையிலான ஒரு வழித்தடத்திலும், நாசரேத் பல்க் முதல் ஸ்ரீவைகுண்டம் என மொத்தம் இரண்டு மினி பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ஊரைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்கள் விவசாய தொழில் மற்றும் விவசாய கூலி வேலைகளை மையமாக கொண்டு பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றியுள்ள அநேக கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் – வல்லநாடு (வழி: வடக்கு தோழப்பன்பண்ணை) வரையிலும்
ஸ்ரீவைகுண்டம் – இசவன்குளம் (வழி -பத்மநாபமங்கலம்)
ஸ்ரீவைகுண்டம் – பேய்குளம் (வழி – கருங்குளம், தெற்கு காரச்சேரி)
ஸ்ரீவைகுண்டம் -சேரகுளம் (வழி கால்வாய்) ஸ்ரீவைகுண்டம் ராமானுஜம்புதூர் (வழி கருங்குளும், தெற்கு காரசேரி)
ஸ்ரீவைகுண்டம் -ஏரல் (வழி – சிவராமமங்கலம்)
ஸ்ரீவைகுண்டம் தெய்வச்செயல்புரம் (வழி – புதுப்பட்டி) ஸ்ரீவைகுண்டம் பொட்டல் (வழி சாமியாத்து)
ஸ்ரீவைகுண்டம் ஏரல் (வழி – சிவகளை, பெருங்குளம்)
ஸ்ரீவைகுண்டம் -ஸ்ரீமூலக்கரை (வழி பேரூர், பேட்மாநகரம்)
ஆகிய வழித்தடங்களில் உள்ள கிராமங்களில் வாழும் ஏழைய எளிய பொதுமக்கள், விவசாயிகள்,விவசாய கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், இதர நோயாளிகள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றிடவும், கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் பயனடையும் வகையில் மினி பஸ்கள் இயங்கிட நடவடிக்கை எடுக்கும்படி இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பிலும், ஏழை எளிய பொதுமக்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோரிக்கை குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் கூறுகையில்,
சட்டமன்ற தொகுதி மற்றும் தாலுகா தலைநகரான ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டு வாழும் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக நகர்ப்புறங்களை நம்பியுள்ளனர். விவசாய குடும்பத்தினரின் உயர்கல்வி கனவை நினைவாக்கிட நெல்லை, திருச்செந்தூர், நாசரேத், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர அரசு மற்றும் தனியார் பேருந்து நிலைய நம்பி உள்ளனர். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் செயலால் விவசாயிகளும் மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பஸ் பேருந்து இயக்கிட அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் சிறுவைகுண்டம் வழியாக இரண்டு பேருந்துகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் கிராமப்புறங்களில் உள்ளடக்கிய ஸ்ரீவைகுண்டம் தாலுகா மக்கள் நலம் பெறும் வகையில் கூடுதலான வழித்தடங்களில் மினி பஸ்களை இயங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.