
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கருப்பொருள் அஞ்சல் தலை சேகரிப்பும் காட்சிப்படுத்துதலும் குறித்த பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். கருப்பொருள் அஞ்சல் தலை சேகரிப்பும் காட்சிப்படுத்துதலும் குறித்த பயிற்சி பட்டறையில் அஞ்சல் தலை சேகரிப்பாளர் சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், அஞ்சல் தலை சேகரிப்பு உலக அளவில் பரந்து விரிந்துள்ளது. அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பரந்த அளவிலான தபால் தலை கூறுகளை அறிந்திருக்க வேண்டும். அஞ்சல் அட்டைகள், முதல் நாள் அஞ்சல் உறை அஞ்சல் தலை முத்திரை, சிறப்பு அஞ்சல் உறை அஞ்சல் தலை முத்திரை, பயண அஞ்சல் முத்திரைகள், அஞ்சல் குறிகள், மீட்டர் முத்திரைகள், பொது பயன்பாட்டு அஞ்சல் தலை நினைவார்த்த அஞ்சல் தலை குறுவடிவ அஞ்சல் தலை உட்பட பல்வேறு தபால்தலை கூறுகளை அறிந்திருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தவும் வேண்டும். சிறப்புக் கட்டணங்கள், தாமதக் கட்டணங்கள், ரயில்வே கடிதக் கட்டணங்கள், மினியேச்சர் மற்றும் நினைவார்த்த தபால்தலைமுத்திரைகள், அதிகாரப்பூர்வ தபால் முத்திரைகள், தபால் கட்டணம் செலுத்த வேண்டிய முத்திரைகள், போர் வரி முத்திரைகள், கூட்டு அஞ்சல் தலைகள், இராணுவ தந்தி முத்திரைகள், விமான அஞ்சல் முத்திரை, சிறப்பு போக்குவரத்து அஞ்சல் முத்திரை, கடல் போக்குவரத்து முத்திரை, இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட அஞ்சல் முத்திரை என அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ பொருட்களை சேகரித்து கருப்பொருளுக்கு ஏற்ற கதைக்கு தகுந்த வாறு குறிப்புகளையும் பொருட்களையும் தயார் செய்து காட்சிப்படுத்த வேண்டும்.கருப்பொருள் அஞ்சல் தலை சேகரிப்பில் காட்சிப்படுத்துதலில் கருப்பொருளின்தலைப்பு, காட்சிப்படுத்துவதற்கான திட்டமிடல், கருப்பொருளுக்கு ஒத்த கதையை மேம்படுத்துதல், அஞ்சல் சார்ந்த அறிவு, அஞ்சல் சார்ந்த பொருட்களை பயன்படுத்தும் முறை, சேகரிப்பு பொருட்களின் சிறந்த தன்மை, சேகரிப்பு பொருளில் முக்கியத்துவம், சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தும் முறை உள்ளிட்டவற்றுக்கு நடுவர் மதிப்பெண் வழங்குவார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் கருப்பொருள் தலைப்பிற்கு ஏற்ப அஞ்சல் சார்ந்த விவரங்களையும், காட்சிப்படுத்துதலையும் கையாளவில்லை என்றால் சிறந்த காட்சிப்படுத்துதல் ஆக அமையாது. பின்னடைவை சந்திப்பார். அதே வேளையில் அங்கீகரிக்கப்படாத அஞ்சல் தலைகள் மற்றும் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது கருப்பொருளுக்கு ஏற்ப காட்சிப்படுத்த பயன்படும் அஞ்சல் பொருட்கள் உள்ள தொடர்பு முக்கியமானவை ஆகும். காட்சிப்படுத்திய அஞ்சல் சார்ந்த பொருட்கள், முத்திரைகள் குறித்த அறிவு சார்ந்த விளக்கமும் முக்கியமானவை ஆகும். முதல் நாள் மற்றும் சிறப்பு அஞ்சல் உறையில் அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் முத்திரையை காட்சிப்படுத்துவதற்கு காட்சிப்படுத்தப்படும் அட்டையில் ஜன்னல் வடிவ முறையில் காட்சிப்படுத்துவது அவசியமாகும். காட்சிப்படுத்தும் முறையில் கருப்பொருள் கருத்தினை அஞ்சல் சார்ந்த பொருட்களை எவ்வாறு கையாண்டு காட்சிப்படுத்தி விளக்குகிறார்களோ அந்த அஞ்சல் தலை சேகரிப்பாளர் வெற்றி பெறுவார் மாவட்டம், மண்டலம் ,மாநிலம் ,தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் அஞ்சல் தலை கண்காட்சியில் பங்கேற்று வெற்றி பெறலாம் என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், ஜலால், ரமேஷ், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக இணை பொருளாளர் மகாராஜா நன்றி கூறினார்.