
போளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள முக்கிய நகரம். பயணிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என எல்லா தரப்பினரும் நாள்தோறும் இந்த இரண்டு மாவட்ட நகரங்களுக்கு அதிக அளவில் பயணித்து வருகின்றனர். ஆனால், இந்த பயணத்திற்கு போளூர் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
போக்குவரத்து சீர்கேடாக மாறிய அரசு பேருந்துகள்:
வேலூர் மற்றும் திருவண்ணாமலை பேருந்து நிலையங்களில், போளூர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் பயணிகளை ஏற்ற மறுப்பது, அல்லது கிளம்பும் நேரத்தில் மட்டுமே ஏற்றுவது வழக்கமாகிவிட்டது. இதன் விளைவாக, போளூர் பயணிகள் பேருந்துகளில் நின்று பயணிக்கத் தவிர வழியில்லை. குறிப்பாக இரவு நேரங்களில், பெரும்பாலான அரசு பேருந்துகள் நகருக்குள் வராமல் பைபாஸ் சாலையைப் பயன்படுத்துவதால், முதியோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் அதிக சுமை உடைய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
10 வருட ரயில்வே மேம்பாலப் பணியால் மேலும் தீவிரம்:
போளூரில் நடைபெற்ற ரயில்வே மேம்பாலப் பணிகள் நகருக்குள் போக்குவரத்துக்கு பெரும் தடையாக இருந்தன. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து இருப்பினும், நகருக்குள் அரசு பேருந்துகள் வராமல் இருப்பது எதற்காக? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுகிறது.
தனியார் பேருந்துகளின் சூழ்ச்சி Vs அரசு பேருந்துகளின் அலட்சியம்:
தனியார் பேருந்துகள் போளூர் நகருக்குள் வருவதில் எந்தத் தடையும் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன. ஆனால் அரசு பேருந்துகள் மட்டும் பைபாஸ் வழியே சென்றுவிடுகின்றன. இது போக்குவரத்து துறையின் நிர்வாகக் குறையை வெளிக்காட்டுகிறது.
சிறப்பு பேருந்துகளும் பைபாஸ் வழியேதான் – அவலமான நிலை!
மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளும், போளூர் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியே செல்லும் நிலை தொடர்கின்றது. இது பயணிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
பொதுமக்கள் கோரிக்கை – உரிமைக்காகவும், நியாயத்திற்காகவும்!
போளூர் ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளதால், இனி நகருக்குள் பேருந்துகள் நுழையத் தடையில்லை. எனவேவேலூர் மற்றும் திருவண்ணாமலை பேருந்து நிலையங்களில், போளூர் பயணிகளை அலைக்கழிக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அரசு, போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்துத் தெளிவாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தல்.
“போளூர் வழியாக பயணம் செய்வோர், அலைக்கழிக்கப்படுவது அல்ல; உரிமையுடன் பயணிக்கவேண்டியவர்கள்!”