
திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனதால் அவரது ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சரவைலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டதால் விரக்தியடைந்த திமுக நிர்வாகிகள் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி தலைமையில் அவரது ஆதரவு திமுக நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் செய்தனர். அப்போது பேரூராட்சி மன்ற கவுன்சிலர் பாக்யராஜ் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும் டி.எடையார் திமுக கிளை செயலாளர் குணா தனது இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதிவு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாபு, சதாம் காதர் உசேன், ரோபோ சுந்தர், ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இரவு 9 மணியளவில் பொன்முடிக்காக அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவெண்ணெய்நல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.