சென்னை, செப்.
சென்னை அரசுப் பள்ளி மாணவர்களிடையே கால்பந்து திறமையை வளர்க்கும் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக லேடன்ட்வியூ நிறுவனத்தின் சென்னை கால்பந்து லீக் 5வது சீசன் சென்னையில் இன்று துவங்கியது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பகுப்பாய்வு மற்றும் தரவு பொறியியல் நிறுவனமான லேடன்ட்வியூ அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின், சென்னை கால்பந்து லீக்கின் 5வது சீசனில் 25 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அணி என 13 வயதுக்குட்பட்ட பிரிவில் 43 அணிகள் போட்டியிடுகின்றன.
இந்த கால்பந்து போட்டியில், சென்னை முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளை பங்கேற்கின்றனர். லீக் போட்டிகள் வரும் இன்று முதல் 12-ந்தேதி வரை நேரு பூங்காவில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி 13-ந்தேதி சென்னை ஜே.எல். நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும். இன்று காலை போட்டியை எப்சி மெட்ராஸ் ஸ்கவுட்டிங் இயக்குனர் விக்ரம் நானிவடேகர் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், எப்சி மெட்ராசைப் பொறுத்தவரை, களத்திலும் களத்திற்கு வெளியேயும் திறமைமிக்க இளம் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தற்போது 5வது முறையாக நடைபெறும் இந்த போட்டிகள் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும். இன்று ஒரு விளையாட்டாகத் தொடங்குவது எதிர்காலத்தில் ஒரு வீரராக, பயிற்சியாளராக, பிசியோதெரபிஸ்டாக அல்லது ஒரு விளையாட்டு அறுவை சிகிச்சை நிபுணராக கூட அவர்கள் உருவாகலாம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்லாமல் அவர்களுக்கு விளையாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதன்படி விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய லேடன்ட்வியூ இணை நிறுவனர் பிரமாத் ஜந்தியாலா கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது வாழ்க்கையை மாற்றும் சக்தி என்று நாங்கள் நம்புகிறோம். இது தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் பெரிய கனவுகளைத் தூண்டுகிறது. சென்னை கால்பந்து லீக் என்பது கால்பந்தைப் பற்றியது மட்டுமல்ல – இது பின்தங்கிய மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைத் தொடர வழிகளை உருவாக்குவது பற்றியது. சென்னையின் எப்சியுடன் எங்கள் ஆர்டிசி மூலம் ஏற்கனவே 30 வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர், இந்த ஆண்டு மேலும் கூடுதல் மாணவர்களை சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒரு போட்டியும், பெண்கள் பிரிவில் ஒரு போட்டியும் நடைபெறும், இதில் இந்திய கிரிக்கெட் வீரர் டி. நடராஜன் மற்றும் தேசிய அளவிலான ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் வீராங்கனை நர்மதா நிதின் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை கால்பந்து லீக்கில் பிபா அங்கீகாரம் பெற்ற மற்றும் எஸ்டிஏடி சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் பள்ளி முடிந்த பிறகு 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார்கள். இதில் லேடன்ட்வியூவின் திறன் மேம்பாட்டு மையம் மூலம், சென்னையின் எப்சியின் ஸ்கவுட்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை என மொத்தம் 40 தீவிர பயிற்சி அமர்வுகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மொத்தம் 33 அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 10 அணிகள் நேரடியாக போட்டியில் பங்கேற்க உள்ளன.
தங்கள் சொந்த அணிகளைப் பதிவு செய்யும் அரசுப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 10 அணிகள் நேரடியாக போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 20 அணிகளுக்கான முன் தகுதிச் சுற்றுக்கு பின்னர், லீக்கில் சேர ஆறு ஆண்கள் அணியும் நான்கு பெண்கள் அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தங்கள் கால்பந்து பயணத்தைத் தொடர சுமார் 20 திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், இதற்கு லேடன்ட்வியூ பிராந்திய மேம்பாட்டு மையம் தேவையான உதவிகளை வழங்கும், அவர்களுக்கு சென்னையின் எப்சியின் தொழில்முறை பயிற்சியாளர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள், இந்த மாணவர்களுக்கு மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கும் விதமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை கால்பந்து லீக் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்கி உள்ளது. எஸ்டிஏடி உதவித்தொகை பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஸ்பெயினில் ஒரு பயிற்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு மாணவர் என அதற்கு உதாரணமாக பலர் உள்ளனர்.
சென்னை கால்பந்து லீக் சீசன் 5 போட்டி, சமூக உணர்வு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை இணைத்து, வகுப்பறைக்கு வெளியே இளம் திறமைகளை மேம்படுத்துவதற்கான லேடன்ட்வியூவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
போட்டி விவரங்கள்:
• லீக் போட்டிகள்: செப்டம்பர் 8 – 12, 2025 | SDAT மைதானம், நேரு பூங்கா
• இறுதிப் போட்டிகள்: செப்டம்பர் 13, 2025, | மாலை 4:00–7:00 | ஜே.எல். நேரு மைதானம் (ஏ மைதானம்)
