சென்னை, செப்டம்பர் 2025:இந்தியாவின் முன்னணி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, கடுமையான மரபணு கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 8 வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்தியாவின் முதல் PFIC 13 குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சை தூத்துக்குடியைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு மருத்துவமனையின் அதிநவீன குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கடுமையான கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 7 மாதத்திற்கும் குறைவான இரண்டு குழந்தைகளுக்கும் வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையையும் இம்மருத்துவமனை மேற்கொண்டதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான கல்லீரல் பராமரிப்பில் முன்னோடிமருத்துவமனையாக உள்ளது.
ரெயின்போவின் அனுபவம் வாய்ந்த குழந்தை கல்லீரல் நிபுணர்கள் குழு மற்றும் அதன் மேம்பட்ட மாற்று சிகிச்சை வசதிகளால் இந்தஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் மூத்த குழந்தை கல்லீரல் மருத்துவர்டாக்டர் சோமசேகரா ஆகியோரின் தலைமையில், கல்லீரல்அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா கோபால் , குழந்தை இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் ஆலோசகர் டாக்டர் கீர்திவாசன், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகர்களான டாக்டர்கள் கார்த்திக் நாராயணன் மற்றும் நடராஜ் பழனியப்பன் மற்றும், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் சந்தர், செவிலியர்கள் மற்றும் இம்மருத்துவமனை ஊழியர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் நேரடி கல்லீரல் தானம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வரலாற்றில் இம்மருத்துவமனை இடம் பிடித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன், மிகவும் அரிதான மரபுவழி கல்லீரல் பிரச்சினையான உள்-ஹெபடிக் கொலஸ்டாசிஸ் வகை 13 என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான். இதுவரை இந்த நோயால் 8 குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குழந்தைகளுக்கான கொலஸ்டாசிஸின் மிகக் குறைவான பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். அவரது தாயிடமிருந்து சரியான நேரத்தில் பெறப்பட்ட உறுப்பு தானத்தால், அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. மேலும் வழக்கமாக பள்ளிக்கு சென்று வருகிறது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏழு மாதக் குழந்தைக்கு, குழந்தைப் பருவத்திலேயே கடுமையான கல்லீரல் நோய் ஏற்பட்டதால், அவரது தந்தை ஒரு மாதத்தில் தனது உடல் எடையை 9 கிலோ குறைத்து, உறுப்பு தானம் வழங்கிய நிலையில், 11 மணி நேர மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து மாதக் குழந்தைக்கு, கல்லீரல் தானம் மூலம் அவர் உயிர்வாழ இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டது, 14 மணி நேர மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.
வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சைகள் குறித்து கருத்து தெரிவித்த மூத்த குழந்தை கல்லீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சோமசேகரா கூறுகையில், “குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்தில் மிகவும் முக்கியமான மற்றும் சவாலான ஒன்றாகும். ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் எங்கள் நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புடன், இன்று மூன்று அரிய கல்லீரல் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளோம். பெற்றோரின் ஆதரவுடன் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதைப் பார்ப்பது உண்மையிலேயே மனதைத் தொடுவதோடுதனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது. கல்லீரல் பராமரிப்பு சிகிச்சை அளிப்பதில் ரெயின்போவின் நவீன மருத்துவ நுட்பத்தை இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.
ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம், பிரத்யேக குழந்தைகளுக்கான கல்லீரல் ஐ.சி.யூக்கள், மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட இமேஜிங் மற்றும் நோயறிதல் அமைப்புகள், தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை வார்டுகள் மற்றும் 24/7 சிகிச்சை, ஆகியவற்றை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கிறது, இது இளம் நோயாளிகளுக்கு பாதுகாப்பு, துல்லியமான சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
