சென்னை, செப்டம்பர் 30,2025: இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு மக்களிடையே அதிகரித்து காணப்படுவதாக நேச்சர்மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) – இந்திய நீரிழிவு தொடர்பான (ICMR-INDIAB) ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து இந்த ஆய்வு 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 1,21,077 பேரிடம் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் 5 பேரில் ஒருவரிடம் விரிவான உணவுமுறைத் தரவு, மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் உணவுமுறை பழக்க வழக்கங்கள், மேக்ரோநியூட்ரியண்ட் உட்கொள்ளல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற அபாயம் ஆகியவை குறித்தும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், இந்த கட்டுரை ஆசிரியருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், வெள்ளை அரிசி அல்லது முழு கோதுமை மாவில் இருந்து அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த தரமான புரதம் கொண்ட வழக்கமான இந்திய உணவுகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைத்து, தாவர அல்லது பால் புரதங்களிலிருந்து அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ளாமல், வெள்ளை அரிசியிலிருந்து முழு கோதுமை அல்லது தினைக்கு மாறுவது என்பது எந்தவித பலனையும் அளிக்காது என்று தெரிவித்தார்.
முக்கிய கார்போஹைட்ரேட் மூலங்களைப் பொருட்படுத்தாமல், அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான வளர்சிதை மாற்ற அபாயங்கள் காணப்பட்டதாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆராய்ச்சித் துறை தலைவர் மற்றும் இந்த கட்டுரை ஆசிரியர்களில் ஒருவருமான சுதா தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், ஆய்வறிக்கையின் மூத்த ஆசிரியருமான டாக்டர் வி. மோகன் கூறுகையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் குறிப்பாக உணவு மானியங்கள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் கொள்கை சீர்திருத்தங்களை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது மக்கள் தாவர அடிப்படையிலான மற்றும் பால் புரதங்கள் நிறைந்த உணவு முறைகளையும், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
