
கோவை மாவட்டம்
கொடிசியா சார்பில் நடத்தப்படும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வேளாண் கண்காட்சிகளில் ஒன்றான ‘அக்ரி இன்டெக்ஸ்-2026’ கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் ஜூலை 9 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது இதுகுறித்து அக்ரி இன்டெக்ஸ்-2026 தலைவர் என். ஸ்ரீஹரி செய்தியாளர்களிடம் கூறியதாவது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், இயற்கை விவசாயம், உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகள் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU), தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (TNJFU), தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) ஆகியவை இணைந்து கண்காட்சியை நடத்துகின்றன.
கண்காட்சியின் துவக்க விழா ஜூலை 9-ம் தேதி காலை 10 மணிக்கு கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது இதில் சக்தி சுகர்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம். மாணிக்கம் முதன்மை விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைக்கிறார் மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் கே. சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்கின்றனர் டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 460-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 660-க்கும் மேற்பட்ட அரங்குகள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
நர்சரி பொருட்கள் இயற்கை விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் தொடர்பான சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
