
திருவண்ணாமலை, ஜூலை 3:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 23 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 23 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் தொடர்பான முழு விவரங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாகவும் நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வான TNTET Paper–II-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். பணிநியமனம் தற்போதைய அரசின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.
நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர நியமனம் மேற்கொள்ளப்படும் நாள் வரை அல்லது நடப்பு கல்வியாண்டின் பள்ளி இறுதித் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய மாதம் (ஏப்ரல் 2027 வரை) – இதில் எது முன்பாக வருகிறதோ அதுவரை மட்டுமே தற்காலிகமாக பணியாற்றுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான கல்வி மற்றும் தகுதி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் என்ற முகவரிக்கு ஜூலை 10, 2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் காலதாமதமின்றி விண்ணப்பித்து இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
