விழுப்புரம்.ஜூலை.03
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அனைத்துத்துறை சார்பில் போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது போதைப்பொருட்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, சுமார் 400-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் தொடங்கி விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது.
மேலும், போதைப்பொருள் பயன்படுத்துவதினால் நமது உடல் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் நமது குடும்ப பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்து, சமுதாயத்தை மிகவும் பாதிப்படையச் செய்திடும். மேலும், எந்தவொரு நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு உட்படுகிறாரோ அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவது மிகக் கடினம். எனவே, நாம் அனைவரும், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக நம் மாவட்டத்தை உருவாக்கிட ஒன்றிணைந்து செயல்படுவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி பார்கவி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
