சென்னை, ஜூலை 4, 2026: கண் அறுவைசிகிச்சைக்கான நாட்டின் முதன்மை அறிவியல் மாநாடும், இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக் கழகத்தின் (IIRSI) முதன்மையான வருடாந்திர நிகழ்வுமான, இரண்டு நாள் ‘IIRSI மாநாடு 2026’-ஐ தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநர் திரு. இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தொடங்கி வைத்தார்.
2026, ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து 2,000-க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அறிவியல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை கூட்டுப்பணிக்கான ஒரு விரிவான தளத்தை இம்மாநாட்டின் அமர்வுகளும், சிறப்புரைகளும் நேரடி பயிற்சி திட்டங்களும் வழங்குகின்றன.
இம்மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்வு, இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக் கழகத்தின்(IIRSI) தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜீவன் சிங் திதியால், IIRSI-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் அமர் அகர்வால், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் அறிவியல் குழுத் தலைவர் டாக்டர் நம்ரதா சர்மா, IIRSI ARC-ன் தலைவர் டாக்டர் கௌரவ் லூத்ரா, IIRSI-ன் முன்னாள் தலைவர் டாக்டர் டி.பி. லஹானே, IIRSI-ன் முன்னாள் தலைவர் டாக்டர் ராகினி பரேக், IIRSI-ன் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ரித்திகா சச்தேவ், IIRSI-ன் முந்தைய முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் ஜே.கே.எஸ். பரிஹார், IIRSI-ன் சர்வதேச அறிவியல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரோஹித் ஓம் பிரகாஷ் மற்றும் டாக்டர் மோகன் ராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவ வல்லுநர்கள்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண் சிகிச்சை நிபுணர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கண்புரை, ஒளிவிலகல் அறுவைசிகிச்சை, விழிவெண்படலம், விழித்திரை, கிட்டப்பார்வை மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் குறித்த அறிவியல் அமர்வுகளை, புகழ்பெற்ற உள்நாட்டு வெளிநாட்டு வல்லுநர்கள் வழிநடத்துகின்றனர். இத்திட்டத்தில், பன்னாட்டு பேராசிரியர்களின் விரிவுரைகள், நேரடி அறுவைசிகிச்சை விளக்கங்கள் மற்றும் நவீன கண் மருத்துவத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சவாலான சிகிச்சை நேர்வுகள் மற்றும் மருத்துவ செயல்முறை உத்திகள் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்றன.
அறிவியல் நிகழ்வுகளுடன், இந்த மாநாடு பிரத்யேக நேரடிப் பயிற்சி அமர்வுகள், ஆய்வறிக்கை சமர்ப்பிப்புகள் மற்றும் IIRSIகண் மருத்துவ நிழற்படப் போட்டி ஆகியவற்றின் மூலம் நடைமுறைக்கு உகந்த கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. கண் மருத்துவச் சிக்கல்களைக் கையாளுதல் மற்றும் மேம்பட்ட அறுவைசிகிச்சை முறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் ஒரு சுவாரசியமான தளமாக ‘ஆப்தால்மிக் பிரீமியர் லீக்’ (மோகன் ராஜன் OPL கோப்பை) விளங்குகிறது. குழு அடிப்படையிலான வீடியோ விளக்கக்காட்சிகள், சிகிச்சை நேர்வு குறித்த நேரடி விவாதங்கள், அறுவைசிகிச்சை நிபுணர்களின் சுயமதிப்பீடு மற்றும் நிகழ்நேர மதிப்பீட்டு புள்ளிகளுடன் கூடிய நிபுணர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றின் மூலம், இப்போட்டி கண் மருத்துவர்களிடையே மருத்துவ மேன்மையையும் அறுவைசிகிச்சைத் திறனையும் இன்னும் மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
IIRSI 2026-ல் முதன்முறையாக அறிமுகமாகும் ‘BAdS@IIRSI’என்ற பிரத்யேகத் தளம், கண் மருத்துவத்தில் வணிக உத்திகளையும் அறுவைசிகிச்சை முன்னேற்றங்களையும் இணைக்கும் ஒரு தனித்துவமான தளமாக அமைந்துள்ளது. மருத்துவ நிபுணர்களையும் தொழில் துறைத் தலைவர்களையும் ஒரே மேடையில் இணைப்பதன் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கண் பராமரிப்பின் எதிர்கால வழிகாட்டுதல்கள் குறித்த வெளிப்படையான உரையாடல்களுக்கும், உத்திசார் தொலைநோக்கு கண்ணோட்டங்களுக்கும் இந்த அமர்வு வழிவகுக்கிறது. டாக்டர் அஷ்வின் அகர்வால் தலைமையிலான இந்த நேரடி விவாதங்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில் துறையினர் ஆகிய இருதரப்பினருக்குமே ஆழ்ந்த புரிதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்தரங்கின் தொடக்க விழாவில் மாண்புமிகு ஆளுநர் திரு. இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், “மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் சிகிச்சை வழங்குதலில் உலகளவில் இந்தியா ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. IIRSI மாநாடு போன்ற தளங்கள் இதை மேலும் வலுப்படுத்துகின்றன. குறிப்பாக தமிழ்நாடு சுகாதாரச் சேவையிலும், மருத்துவக் கல்வியிலும் முன்னணியில் திகழ்கிறது. இங்குள்ள நிறுவனங்கள் கண் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்த மாநாடு, அறிவுப் பரிமாற்றம், ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு மிக மதிப்புமிக்க ஒரு தளத்தை வழங்குகிறது. இத்தகைய நிகழ்வுகளில் மருத்துவ நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வது, கண் பராமரிப்புச் சேவையை மேம்படுத்தி, இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எண்ணற்ற பேருக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார்.
இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை கழகம் (IIRSI) மற்றும் அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜீவன் சிங் திதியால், தனது உரையில், “கண் பராமரிப்பின் எதிர்காலம் என்பது கூட்டாக ஒருங்கிணைந்து செயல்படுவது, கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றில் தான் உள்ளது. உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நிபுணர்களையும், வளர்ந்து வரும் இளம் வல்லுநர்களையும் ஒன்றிணைக்கும் இந்த மாநாடு, அறிவியல் பரிமாற்றத்திற்கும் அறுவைசிகிச்சை திறனுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்கி, ஊக்கமளிக்கும் ஆற்றலாக செயல்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான, மேம்பட்ட மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கண் பராமரிப்பை வழங்குவதற்கான நமது ஒட்டுமொத்த திறனை மேலும் வலுப்படுத்தும் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.
IIRSI அமைப்பின் பொதுச் செயலாளரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான பேராசிரியர் அமர் அகர்வால் உரையாற்றுகையில், “கண் மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நிபுணர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவும், கண் மருத்துவ அறிவியலை மேம்படுத்தவும் உதவும் முதன்மைத் தளமாக IIRSI கருத்தரங்க மாநாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் பன்முகத்தன்மையும் எண்ணிக்கையும், கண் அறுவைசிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு உலகளவில் கிடைத்து வரும் அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியல் அமர்வுகள், நேரலையாக நடைபெறும் அறுவைசிகிச்சைகள், நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம், கண் மருத்துவர்களுக்கு நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தகவல்களையும், திறன்களையும் இம்மாநாடு வழங்குகிறது. இந்த மேம்பாட்டின் மூலம் சிகிச்சை பெறுவோருக்கு சிறந்த பலன்களை உறுதிசெய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். கல்வி சார்ந்த விஷயங்களைத் தாண்டி, இந்த மாநாடு தொழில்முறை சார்ந்த கூட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், இந்தியாவிலும் மற்றும் உலகளவிலும் கண் சிகிச்சை பராமரிப்பின் எதிர்காலத்தை உருவாக்க கூடிய கூட்டு செயல்பாடுகளுக்கு அடித்தளமிடுகிறது” என்றார்.
