
ஆமை வேகத்தில் நடைபெறும்
மேலப்பாளையம் அம்பை. சாலை விரிவாக்கப் பணியால்
பொதுமக்கள் கடும் பாதிப்பு: விபத்து அபாயம்!
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, மக்கள் நீதி மய்யத்தின்
முன்னாள் மாவட்டச் செயலாளர் நெல்லை கமலக்கண்ணன் கண்டனம்!
நெல்லை.செப்.24
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நெல்லை மாவட்டச் செயலாளர் எம்.கமலக்கண்ணன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக் கண்டித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் அம்பை. நெடுஞ்சாலையில் மேலப்பாளையம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து, மேலப்பாளையம் கருங்குளம் பகுதி வரை உள்ள சாலை விரிவாக்கப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை விரிவாக்கப் பணி எல்லா இடத்திலும் ஒரே மாதிரி நடைபெறவில்லை. ஒரு இடத்தில் கூடுதலாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் இடங்களுக்கு அருகில் சாலை விரிவாக்கப்பணி மிகவும் குறைவான அளவில் நடைபெறுகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணி முறையான அளவில் நடைபெறவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகள் முறையான ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் மக்கள் நெருக்கம் மிகவும் அதிகமாக உள்ள மேலப்பாளையத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அம்பை. சாலையில் ஏற்கனவே இருந்த சாலையை கிண்டி விட்டு மாதங்கள் பல ஆன நிலையில் சாலையில் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருக்கிறது. ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் ஒரு சிறிய குழந்தை சாலை விபத்தில் மரணம் அடைந்தது.
நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் தொடர் மெத்தனப் போக்கால் மேலப்பாளையம் பகுதியில் அம்பை. நெடுஞ்சாலையில் மீண்டும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளன. எனவே இதுகுறித்து தமிழக அரசும், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுத்து நெல்லை மேலப்பாளையம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து மேலப்பாளையம் கருங்குளம் வரை அம்பை. நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணியை முறையாக மேற்கொள்ளவும், போர்க்கால அடிப்படையில் சாலையை அமைத்து விபத்துகளைத் தவிர்க்கவும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யத்தின் நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளரும், சமூக ஆர்வலருமான நெல்லை எம்.கமலக்கண்ணன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
