
.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் வாயிலாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி பயில வழிகாட்டும் விதமாக உயர்கல்வி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஓசூர் சார் ஆட்சியர் பங்கேற்று பார்வையிட்ட இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனுள்ளதாக அமைந்தது என கருத்து தெரிவித்ததுடன் திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக உயர்கல்வி பயில இயலாத நிலையில் அவர்களை ஊக்குவித்து ஆலோசனைகள் வழங்கி உயர்கல்வியை பயில ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி கிராமப்புற ஊரக பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் ஆலோசனை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி சிறப்பு முகாம் நடைபெற்றது. மூதறிஞர் ராஜாஜி பயின்ற வரலாற்று சிறப்புமிக்க அரசு ஆர் வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் அரசு பல் தொழில்நுட்பத் துறை, தொழில்கல்வித்துறை, பொறியியல் துறை மற்றும் வங்கிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் அரங்குகள் அமைத்து மாணவ மாணவியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த முகாமை ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, குத்து விளக்கு ஏற்றி வைத்து முறைப்படி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் உட்பட பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவ மாணவிகள்,
கிராமப்புற பகுதிகளில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற பின்பு என்ன படிப்பது என தெரியாமல் மனதளவில் குழம்பிப் போயிருந்த நிலையில் இந்த முகாம் எங்களது சந்தேகங்களை தீர்த்து உயர்கல்வி பயில்வதற்கான பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியது. இதனால் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது பற்றிய சந்தேகங்கள் தீர்ந்து தெளிவடைந்து இருக்கிறோம். இந்த திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.