மாவட்டத்தில் பத்திரப்பதிவு விதிமுறைகளில் தளர்வு செய்யப்படாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை நடந்தது செயலாளர் பாண்டியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: 

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை நிலப்பரப்பு குறைந்தும், மக்கள் தொகை அதிகமாகவும் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் குறைந்த பட்சம் 5 சென்ட் நிலங்களில்தான் வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில்   இந்த மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 3 மற்றும் 4 சென்ட் நிலம் பத்திரப்பதிவு நடைபெறாமல் இருப்பதால் நிலம் வைத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதில் விவசாயிகள், மீனவர்கள் கூலி தொழிலாளர்கள் அதிகமாக பாதிப்படைந்துள்ளனர். இந்த மக்கள் நிலம் வாங்கி வீடு கட்டுவது கானல் நீராக மாறி வருகிறது. பத்திரப்பதிவு தடைபட்டுள்ளதால், மக்கள் தங்கள் நிலங்களை விற்று கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

 எனவே ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவு நனவாக வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு தொடர்பான விதிமுறைகளை தளர்வு செய்து முன்பு நடைபெற்றது போன்று பத்திரப்பதிவு நடைபெற வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்களிடம் மனு அளித்துள்ளனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. 

 எனவே, இப்பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்